மல்லையாவை மீட்க என்ன செலவு?: வாய் திறக்க சி.பி.ஐ., மறுப்பு

தினமலர்  தினமலர்
மல்லையாவை மீட்க என்ன செலவு?: வாய் திறக்க சி.பி.ஐ., மறுப்பு

புதுடில்லி: லண்டனில் பதுங்கி உள்ள, தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வர எவ்வளவு செலவாகும் எனத் தெரிவிக்க, சி.பி.ஐ., மறுத்துவிட்டது.

தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில், கோடிக்கணக்கில் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல், பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பிச் சென்றான். அதேபோல், ஐ.பி.எல்., தலைவராக இருந்த லலித் மோடி, அதில், பல முறைகேடுகளை செய்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இவர்கள் இருவர் மீதும், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது. இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும், சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளது.

தப்பி ஓட்டம்:

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த, விஹார் துருவ் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனு: வங்கிகளில், 9,500 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் பதுங்கி உள்ள, விஜய் மல்லையா, ஐ.பி.எல்., போட்டிகளில் முறைகேடு செய்து, லண்டனுக்கு தப்பியோடிய, லலித் மோடி ஆகியோரை, இந்தியா அழைத்து வர, சி.பி.ஐ., முயற்சித்து வருகிறது.

மல்லையா மீதான வழக்குகளுக்காக, சி.பி.ஐ., அதிகாரிகள், லண்டனுக்கு பலமுறை சென்றுள்ளனர். இதனால், மல்லையா மற்றும் லலித் மோடியை, இந்தியா கொண்டு வருவதற்கு, எவ்வளவு செலவாகும் என்பதை, சி.பி.ஐ., தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை, சி.பி.ஐ.,க்கு, மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியது. அதன்பின், இந்த மனுவை, மல்லையா, லலித் மோடி மீதான வழக்குகளை விசாரித்து வரும், சிறப்பு குழுவுக்கு, சி.பி.ஐ., அனுப்பியது.

விதிவிலக்கு:

மனுவை ஆய்வு செய்த, சி.பி.ஐ., சிறப்பு விசாரணைக் குழுவினர், 'மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வருவதற்கு ஆகும் செலவுகளை, வெளிப்படையாகக் கூற முடியாது. 'தகவல் அறியும் சட்டத்தில் இருந்து, சில அமைப்புகள் கூறும் தகவல்களுக்கு விதிவிலக்கு உண்டு. அதனால், எங்களால் வெளிப்படையாகக் கூற முடியாது' என, மறுத்துவிட்டனர்.

மூலக்கதை