டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் .... ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைப்பு

தினகரன்  தினகரன்
டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் .... ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைப்பு

புதுடெல்லி: டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 17 வீட்டு உபயோக பொருட்கள் உட்பட 100 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தி ஓராண்டு நிறைவுற்ற நிலையில், 28வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில், மத்திய நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தலைமையில் நேற்று நடந்தது. இதில் சானிடரி நாப்கின் மற்றும் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மீதான வரியை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்படி, 17 வீட்டு உபயோக பொருட்கள் உட்பட 100 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.  கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: வீட்டு உபயோக பொருட்களான வாஷிங் மெஷின், ஏசி, பிரிட்ஜ், டிவி, வீடியோ கேம்கள், வேக்குவம் கிளீனர்கள், டிரெய்லர், ஜூஸ் மிக்சி, கிரைண்டர், ஹேர் டிரையர் ஆகியவற்றின் மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டிவியை பொருத்தவரை 68 செ.மீ. (27 அங்குலம்) வரையிலான டிவி.க்களுக்கான வரி 18 சதவீதமாக இருக்கும். சானிடரி நாப்கினுக்கு 12 சதவீத வரி விதிப்பு இருந்தது. எதிர்பார்த்தபடி, இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் இதற்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல், ராக்கி, மார்பிள், கல் மற்றும் மரத்தினாலான சுவாமி சிலைகள், செறிவூட்டப்பட்ட பால் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கைவினை பொருட்கள், கைப்பை, மூங்கில் தரை, ஜூவல்லரி பாக்ஸ், பெயிண்டிங்கிற்கான மர பாக்ஸ், கண்ணாடி கலைப்பொருட்கள், கற்களால் ஆன கலைப்பொருட்கள், வேலைப்பாடு பிரேம் கொண்ட முகம் பார்க்கும் கண்ணாடி, கைகளால் செய்யப்பட்ட விளக்குகள் ஆகியவற்றுக்கான வரி 12 சதவீதமாக குறைத்து ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது. பொது உபயோகத்துக்கு பயன்படும் 1,000 வரையிலான காலணிகள், நிறுவனங்கள் பயன்பாட்டுக்கான எத்தனால் மீதான வரி 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தோல் பொருட்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல், சிறப்பு பயன்பாட்டு வாகனங்கள், ஒர்க் டிரக், டிரெய்லர், வாசனை திரவியங்கள், டாய்லட் ஸ்பிரே ஆகியவையும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான நடைமுறை எளிமையாக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டு வர்த்தகம் ₹5 கோடி வரை உள்ள வர்த்தகர்கள், மாதந்தோறும் தாக்கல் செய்வதற்கு பதிலாக, காலாண்டுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதன்மூலம் 93 சதவீத வர்த்தகர்கள், சிறு வணிகர்கள் பயன் பெறுவார்கள். அசாம், அருணாசல பிரதேசம், இமாசல பிரதேசம், சிக்கிம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி தாக்கல் செய்வதில் இருந்து அளிக்கப்படும் விலக்கு ஆண்டு வர்த்தகம் ₹10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டல்களுக்கு கணக்கு தரப்படுவதற்கு என்று இல்லாமல், நிலையான வரி வசூலிக்கப்படும்.வரி விலக்கு அளிக்கப்பட்டவை:சானிடரி நாப்கின், ராக்கி கயிறு மார்பிள், கல் மற்றும் மர சுவாமி சிலைகள் செறிவூட்டப்பட்ட பால்5% வரி:எத்தனால் ஆயில், காலணிகள்12%  வரி:கைவினை பொருட்கள், கைப்பை மூங்கில் தரை, ஜூவல்லரி பாக்ஸ், கண்ணாடி, கல் கலைப்பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட முகம்பார்க்கும் கண்ணாடி, கையால் செய்யப்படும் விளக்குகள்18% வரி:வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி (27 அங்குலம் வரை), வீடியோ கேம்கள், வேக்குவம் கிளீனர், டிரெய்லர், மிக்சி, கிரைண்டர், ஹேர்டிரையர், ஷேவர், வாட்டர் கூலர், வாட்டர் ஹீட்டர், லித்தியம் அயன் பேட்டரி, மின்சார அயர்ன் பாக்ஸ், வாசனை திரவியம், டாய்லட் ஸ்பிரே, பெயின்ட், பட்டி, வார்னீஷ், சிறப்பு பயன்பாட்டு வாகனங்கள், ஒர்க் டிரக், டிரெய்லர்

மூலக்கதை