9 நாள் போராட்டத்தைக் கைவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

விகடன்  விகடன்
9 நாள் போராட்டத்தைக் கைவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

கடந்த 9 நாள்களாக ஆளுநர் மாளிகையில் போராட்டம் நடத்தி வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.


டெல்லியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக ஆம் ஆத்மி கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பய்ஜால், இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்டவும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொருள்களை  வழங்கும் திட்டத்துக்கு அனுமதியளிக்க கோரியும் கடந்த 9 நள்களாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநர் மாளிகையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவருடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 3 அமைச்சர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவளித்து வந்தனர். இதனிடையே டெல்லி உயர் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம் நடத்துவது ஏன் எனவும் போராட்டம் நடத்த அனுமதியளித்தது யார் எனவும் கேள்வி எழுப்பியது. இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, துணை நிலை ஆளுநர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து கெஜ்ரிவால் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார். இதுகுறித்து பேசிய மணீஷ் சிசோடியா, தங்களது போராட்டம் அதிகாரிகளுக்கு எதிரானதல்ல என்று தெரிவித்தார்.
 

மூலக்கதை