விநாயகா மிஷன் உட்பட 4 நிகர்நிலை பல்கலை.கள் வழங்கிய இன்ஜினியரிங் பட்டம் சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : தொலைதூர கல்வி மூலம் விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேசன் உள்பட 4 நிகர்நிலை பல்கலை கழகங்கள் வழங்கிய இன்ஜினியரிங் பட்டங்கள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து யுஜிசி அதிரடி தடை விதித்துள்ளது. நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் தொலைதூர கல்வித்திட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு நவம்பர் 3ல் பிறப்பித்த உத்தரவில், ‘ நாட்டில் இயங்கி வரும் அனைத்து நிகர்நிலை பல்கலைக் கழகங்களும் சம்பந்தப்பட்ட ஒழுங்காற்று ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்றே 2018-19ம் ஆண்டுக்கான தொலை தூர கல்வித் திட்டத்தை தொடர வேண்டும். இல்லையெனில் அவை தடை செய்யப்படும். இந்த நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் கல்வி மையங்களை முழுமையாக உரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அதன்பிறகே அனுமதி வழங்க வேண்டும்.ஜே.ஆர்.என். ராஜஸ்தான் வித்யாபீட், இன்ஸ்டிடியூட் ஆப் அன்வான்ஸ்ட் ஸ்டீஸ் இன் எஜூகேசன் (ராஜஸ்தான்), அலகாபாத் அக்ரிகல்சுரல் இன்ஸ்டிடியூட், விநாயகா மி‌ஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேசன்(தமிழ்நாடு) ஆகிய நிகர் நிலை பல்கலைக் கழகங்களில் 2001 முதல் 2005 வரை படித்து பட்டம் பெற்ற மாணவர்களின் பட்டம் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் இந்த 4 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது’ என்று தெரிவித்தனர். இதன் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழக மானியக்குழு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேசன் உள்பட 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தொலைதூர அடிப்படையில் வழங்கிய இன்ஜினியரிங் பட்டங்கள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக யுஜிசி செயலாளர் பி.கே. தாக்கூர் கூறியதாவது;ஏஐசிடிஇ விதிமுறைப்படி நிகர்நிலை பல்கலைக்கழங்கள் இனி ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் விண்ணப்பிக்க வேண்டும். ஏஐசிடிஇ அனுமதி இல்லாமல் மேற்கண்ட 4 பல்கலைக் கழகங்களும் எந்த ஒரு புதிய தொழில்நுட்ப பாடத்தையும் அறிமுகம் செய்யக்கூடாது. இதன் அடிப்படையில் இந்த 4 பல்கலைக் கழகங்களில் பெற்ற அனைத்து இன்ஜினியரிங் பட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த கல்லூரிகளில் படித்து இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு 2018 ஜனவரி 18க்குள் தேர்வு வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கள் தேர்வுகளை எழுத இரண்டு வாய்ப்புகள் மட்டும் வழங்கவும் அறிவுறுத்தி உள்ளது.

மூலக்கதை