நிதிஷின் பிரசாரத்தால் திருந்தி வரதட்சணையை திருப்பி தந்த மாமனார்

தினமலர்  தினமலர்
நிதிஷின் பிரசாரத்தால் திருந்தி வரதட்சணையை திருப்பி தந்த மாமனார்

பாட்னா: பீஹாரில், வரதட்சணை கொடுமைக்கு எதிராக, முதல்வர், நிதிஷ் குமார் செய்து வரும் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்ட, ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர், தன் மகன் திருமணத்துக்காக, மணமகள் குடும்பத்திடம் பெற்ற, நான்கு லட்சம் ரூபாயை திருப்பித் தந்துள்ளார்.

பீஹாரில், முதல்வர், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர், நிதிஷ் குமார், வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணத்துக்கு எதிராக, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆரா மாவட்டத்தைச் சேர்ந்த, பள்ளியின் முன்னாள் முதல்வர், ஹிரிந்திரா சிங்கின் மகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரது மகளுக்கும், டிசம்பரில் திருமணம் நடக்கவுள்ளது. இந்த திருமணத்திற்காக, மணமகள் வீட்டாரிடம், நான்கு லட்சம் ரூபாயை, வரதட்சணையாக, ஹிரிந்திரா சிங் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நிதிஷ் குமாரின் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்ட ஹிரிந்திரா சிங், வரதட்சணை பணம், நான்கு லட்சம் ரூபாயை, மணமகள் வீட்டாரிடம் திருப்பி தந்துள்ளார். முதல்வர் நிதிஷின் கருத்துக்களில் உள்ள உண்மையை உணர்ந்து, அந்த பணத்தை திருப்பித் தந்துள்ளதாக, ஹிரிந்திரா சிங் கூறியுள்ளார்.

இது குறித்து, மணமகளின் அண்ணன், ரோஹித் சிங் கூறியதாவது: வரதட்சணை பணத்தை, மணமகனின் தந்தை திருப்பித் தந்தபோது, குழப்பம் அடைந்தோம். திருமணத்தை, அவர்கள் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கருதினோம். மாறாக, நல்ல எண்ணத்துடன், பணத்தை அவர்கள் தந்து உள்ளனர். நல்ல குடும்பத்தில், எங்கள் பெண்ணை திருமணம் செய்து தருவது, மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை