நிதிஷ் காரை தடுத்த மோடி பாதுகாவலர்கள்

தினமலர்  தினமலர்
நிதிஷ் காரை தடுத்த மோடி பாதுகாவலர்கள்

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பீஹாருக்கு வந்தபோது, விமான நிலையத்தில் அவரை வரவேற்க காத்திருந்த முதல்வர் நிதிஷ் குமாரின் கார் நிறுத்தப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. பாட்னா பல்கலையின் நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி, நேற்று முன்தினம் பீஹாருக்கு சென்றார். கூட்டணி அரசு அமைந்த பின், பிரதமர் மோடி பீஹாரில் பங்கேற்கும் முதல் விழா என்பதால், அவரை வரவேற்க, நிதிஷ் குமார், முன்னதாகவே, பாட்னா விமான நிலையத்துக்கு சென்றார்.

மோடியின் விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், ஓடுதளப் பாதைக்கு சென்றபோது, நிதிஷ் குமாரின் காரை, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும், எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படையினர் தடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாநில போலீஸ் உயரதிகாரிகள், உடனடியாக, எஸ்.பி.ஜி.,யின் உயரதிகாரிகளை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினர். இதனால், சில நிமிடங்களுக்கு நிதிஷ் குமாரின் கார் நிறுத்தப்பட்டது.

'பிரதமரின் பயணத்துக்கு முன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, எஸ்.பி.ஜி.,யின் அதிகாரிகளுடன் மாநில போலீசார் ஆலோசனை நடத்துவர். அவ்வாறு ஆலோசனை நடத்திய பின்னும், இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது' என, பீஹார் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்; இந்த சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை