ரயில் உணவு தரம்: மத்திய அரசு அதிரடி

தினமலர்  தினமலர்
ரயில் உணவு தரம்: மத்திய அரசு அதிரடி

புதுடில்லி: 'ரயில்களில், பயணியருக்கு வழங்கப்படும் உணவு பொட்டலங்களில், அவற்றின் அளவு, 'பேக்' செய்யப்பட்ட தேதி மற்றும் ஒப்பந்ததாரரின் பெயர் விபரம் உள்ளிட்டவை கட்டாயம் இடம் பெற வேண்டும்' என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, ரயில்வே மண்டல பொது மேலாளர்கள் மற்றும் இந்திய ரயில்வே மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு, அமைச்சர், பியுஷ் கோயல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ரயில் பயணியருக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது. ரயில்களில் சமைப்பதை நிறுத்தி, ரயில் நிலையங்களில் உணவு விற்பனை துவக்கப்படும் என, ரயில்வே வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இனி, ரயில் பயணியருக்கு வழங்கப்படும் உணவுப் பொட்டலங்களில், அவற்றை தயாரித்த ஒப்பந்ததாரர், நிறுவனத்தின் பெயர், உணவு தயாரிக்கப்பட்ட தேதி, அது, சைவமா, அசைவமா என்பது குறித்த தகவல் உள்ளிட்டவை கட்டாயம் இடம் பெற வேண்டும். உணவின் அளவும், சரியாக குறிப்பிட வேண்டும். இந்த விபரங்கள் இல்லாத உணவுப் பொட்டலங்களை தயாரிக்கும் ஒப்பந்த நிறுவனம் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை