இன்டர்நெட் மோசடிகளை தடுக்க புதிய சட்டங்கள் : ராஜ்நாத்சிங் தலைமையில் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்டர்நெட் மோசடிகளை தடுக்க புதிய சட்டங்கள் : ராஜ்நாத்சிங் தலைமையில் முடிவு

புதுடெல்லி : இன்டர்நெட் வாயிலாக நடைபெறும் நிதி மோசடிகளை தடுக்க புதிய சட்டங்களை இயற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்  டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் மின்னணு முறையிலான பணப் பரிவா–்த்தனைகளையும், இணையவழி பணப்பரிமாற்றத்தையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இதன் காரணமாக கிரெடிட், டெபிட் கார்டுகள், நெட் பேங்க்கிங், இ வாலட் போன்ற இன்டர்நெட் வழிப் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் இதில் பல்வேறு வகைகளில் நிதி முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன.

இவற்றை தடுப்பதற்கு போதிய சட்டங்கள் இல்லாததால் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியாமல் போகிறது. இன்டர்நெட் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருங்கள் என்ற விழிப்புணர்வை மட்டுமே வங்கிகளால் மேற்கொள்ள முடிகிறது.

இது தொடர்பாக உரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இது தொடர்பான உயர் நிலைக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பல்வேறு விசாரணை அமைப்புகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இன்டர்நெட் நிதி மோசடிகளை தடுக்க சட்டரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இத்தகைய நிதி மோசடிகள் நடைபெறாமல் கண்காணிக்க புதிய தொழில்நுட்பங்களை கையாள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 496 இணையவழி தாக்குதல்களும், இணையவழி நிதி மோசடிகளும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை