பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் காஷ்மீரில் துப்பாக்கி சூடு: பள்ளிகள் மூடல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் காஷ்மீரில் துப்பாக்கி சூடு: பள்ளிகள் மூடல்

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையோரங்களில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய நிலைகள் மீது குண்டுகள் வீசுவது, துப்பாக்கி சூடு நடத்துவது போன்றவற்றில் இறங்கியுள்ளது. இதனால் எல்லையோரம் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வீடுகள் சேதமடைவதுடன், உயிரிழப்புகளும் நடக்கிறது. அச்சத்துடனே வாழ்ந்துவரும் மக்கள் அங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, அர்னியா பகுதியில் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.

இதனால், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்வதால் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என தெரியவில்லை.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 5 ஆயிரம் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாணவர் ஒருவர் கூறுகையில், ‘‘எல்லையோர பகுதிகளில் தொடர் தாக்குதல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இதனால், மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது’’ என்றார். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காணவேண்டும் என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

.

மூலக்கதை