அடுத்த வாரம் முதல் கத்தாரில் சிக்கிய இந்தியர்களுக்காக கூடுதல் விமானங்கள் இயக்கம்: அமைச்சர் சுஷ்மா ஏற்பாடு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: தடை விதிக்கப்பட்டுள்ள கத்தார் நாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களை அழைத்து வர அடுத்த வாரம் முதல் கூடுதல்  விமானங்களை இயக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்து  வருவதாக கத்தார் மீது சவுதி அரேபியா குற்றச்சாட்டு சுமத்தியது. இதனால் அதனுடனான தொடர்பை சவுதி அரேபியா துண்டித்துக் கொண்டது.  இதையடுத்து ஐக்கிய அரபு எமிரேட், பஹ்ரைன் உள்ளிட்ட 7 நாடுகள் கத்தார் உடனான உறவை துண்டித்தது. அங்கு நெருக்கடியான நிலை  ஏற்பட்டுள்ளது.  உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கத்தாரில் சுமார் 7 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். நெருக்கடியான சூழ்நிலையால் பலர் நாடு திரும்ப விரும்புகின்றனர். இந்நிலையில், அங்கு  தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானங்களை இயக்குமாறு, விமானப்  போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  நிறுவனம் கேரளாவிலிருந்து தோகாவுக்கு 25ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை சிறப்பு விமானங்களை இயக்குகிறது. ஜெட் ஏர்வேஸ்  நிறுவனமும் மும்பை தோகா இடையே வியாழன் மற்றும் வெள்ளி அன்று கூடுதல் விமானங்களை இயக்குகிறது.

மூலக்கதை