காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு பதிலாக அருந்ததி ராயை ஜீப்பில் கட்டுங்கள்: பாஜ எம்பி சர்ச்சை பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு பதிலாக அருந்ததி ராயை ஜீப்பில் கட்டுங்கள்: பாஜ எம்பி சர்ச்சை பேச்சு

புதுடெல்லி: காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு பதிலாக எழுத்தாளர் அருந்ததி ராயை ஜீப்பில் கட்டுங்கள் என்ற பாஜ எம்பியின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள், இளைஞர்கள் தொடர்ந்து கல் எறிந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் இளைஞர்கள் பலியாகும் அவலம் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் அண்மையில் பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல் எறிவதை தடுக்க கிராமவாசி ஒருவரை ராணுவ ஜீப்பில் முன்புறமாக கட்டி மனித கேடயமாக பயன்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனஅரசு அறிவித்திருந்தது. விசாரணையில் மேஜர் லீத்தல் கோகாய் என்பவர் தான் கிராமவாசியை ஜீப்பில் மனித கேடயமாக கட்டினார் என்பது தெரியவந்துள்ளது.

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் வேளையில் அவருக்கு இதற்காக பதவி உயர்வும் விருதையும் வழங்க தளபதி விபின் ராவத் அறிவித்துள்ளார். இதற்கு புக்கர் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடியாக பிரபல நடிகரும், பாஜ எம்பியுமான பரேஷ் ராவல் தனது டுவிட்டரில், போராட்டக்காரர்களுக்கு பதிலாக அருந்ததிராயை ஜீப்பில் கட்டி இழுத்து செல்ல வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இது கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

ராவலின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.

யாராக இருந்தாலும் தனிப்பட்ட நபர்கள் மீதான மதிப்பு குறைவான வன்முறை ரீதியான கருத்தியல் தாக்குதல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று கண்டித்துள்ளார்.

.

மூலக்கதை