நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது  மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி- நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கும் ஆதாரை பயன்படுத்தி வருகிறது.

ஆதார் இணைப்பதன் மூலம் முறைகேடுகளை தடுத்து மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. மேலும் பள்ளியில் குழந்தைகள் சாப்பிடும் மதிய உணவு திட்டம் தொடங்கி, மொபைல் போன் இணைப்பு, ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு எண் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் முறைகேடுகளை களையும் வகையில் ஆதார் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது.



மக்களுக்கான நல திட்டங்களான முதியோர் ஓய்வூதியம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பொது வினியோக திட்டம் ஆகியவற்றிற்கும் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில அரசுகளுக்கு அனுப்பிய உத்தரவில் இதுகுறித்து மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது. அதே போல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பயன்படும் பான் கார்டுடனும் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இவ்வாறு ஆதார் இணைக்கப்படாத சேவைகள் செல்லாது என்றும் மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இந்த சூழலில் ஆதாரை நலத்திட்டங்களுக்கு கட்டாயமாக்குவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆதார் தொடர்பான இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், மத்திய, மாநில அரசுகள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது. அதே நேரத்தில் வங்கி கணக்கு தொடங்குதல் உள்ளிட்டவற்றிற்கு ஆதார் இணைப்பதை தடுக்க முடியாது.   ஆதார் தொடர்பாக 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைத்து விசாரிக்கப்பட வேண்டும்.

ஆனால் தற்போது உடனடியாக அதை அமைப்பதற்கு சாத்தியமில்லை.

எனவே ஆதாரை நலத்திட்டங்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

.

மூலக்கதை