தைரியம் இருந்தால் சசிகலா படத்துடன் பிரசாரம் செய்யுங்கள் டி.டி.வி.தினகரனுக்கு, மதுசூதனன் சவால்

PARIS TAMIL  PARIS TAMIL
தைரியம் இருந்தால் சசிகலா படத்துடன் பிரசாரம் செய்யுங்கள் டி.டி.வி.தினகரனுக்கு, மதுசூதனன் சவால்

ஓ.பன்னீர்செல்வம் அணியின் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் நேற்று மதியம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை சாய்பாபா காலனி, ராதாகிருஷ்ணன் நகர் பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் வீதி, வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்தும் ஆதரவு திரட்டினார்.

அவருக்கு ஆதரவாக வடசென்னை ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஜனார்த்தனன் உள்பட நிர்வாகிகளும் இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

டி.டி.வி. தினகரனுக்கு சவால்

பிரசாரத்தின் போது மதுசூதனன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் எங்களுக்கு போட்டி தி.மு.க. தான். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சிக்கு என்றைக்கும் கருணாநிதி கட்சி தான் எதிரி. டி.டி.வி. தினகரன் தேர்தல் பணிமனையில் சசிகலா படம் வைக்கவில்லை. டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராக சசிகலா தான் நியமித்தார். அப்படி இருக்கும் போது அவர் ஏன் சசிகலா படத்தை போடவில்லை?.

சசிகலா படத்தை வைத்து பிரசாரம் செய்ய வேண்டியது தானே. ஏன் அவர் செய்யவில்லை. தைரியம் இருந்தால் சசிகலா படத்தை வைத்து ஆர்.கே.நகர் மக்களிடம் அவர் வாக்குகள் கேட்கட்டும். சசிகலா படத்தை போடுவதற்கு வெட்கப்படுகிறார்கள் என்றால், அதில் ஏதோ மர்மம் இருக்கிறது. சசிகலா படத்தை வைத்து பிரசாரம் செய்தால் ஒரு ஓட்டு கூட விழாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்

சசிகலாவின் குடும்பத்தின் அராஜகத்துக்கு தேர்தல் கமிஷன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டுபிடிக்க வேண்டும். சசிகலா குடும்பத்துக்கு 1991-ம் ஆண்டுக்கு பிறகு இவ்வளவு சொத்து மதிப்பு வந்தது எப்படி? இதுபோன்ற முக்கிய அம்சங்களை முன் வைத்து தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வேன். நான் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை