விவசாயிகள் தற்கொலை பட்டியல் தமிழகத்துக்கு எட்டாவது இடம்

தினமலர்  தினமலர்
விவசாயிகள் தற்கொலை பட்டியல் தமிழகத்துக்கு எட்டாவது இடம்

ஆமதாபாத்: வறட்சி காரணமாக தற்கொலை செய்த விவசாயிகள் எண்ணிக்கையில், மஹாராஷ்டிர மாநிலம் முதலிடத்திலும், தமிழகம் எட்டாவது இடத்திலும் இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சக பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால், விவசாய நிலங்கள் நீரின்றி வறண்டன. விவசாயத்திற்காக கடன் வாங்கிய, விவசாயிகள், அதை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். வறட்சி, வறுமை, கடன் சுமையால் தத்தளித்த விவசாயிகள் பலர், தற்கொலை செய்தனர்.
முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலம், ஆமதாபாத்தைச் சேர்ந்த, விவசாயிகள் நல ஆர்வலரான, பாரத்சிங் ஜாலா என்பவர், தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான இழப்பீடு குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்த பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது.
கடந்த, 2013 - 2015 வரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குறித்த பட்டியலை, மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், மஹாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் எட்டாவது இடத்திலும் உள்ளன.

பட்டியல் விபரம் வருமாறு: மஹாராஷ்டிராவில், 11 ஆயிரத்து, 441 விவசாயிகளும்; கர்நாடகாவில், 3,740 விவசாயிகளும்; ம.பி.,யில், 3,578 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர்.
தெலுங்கானாவில், 2,747 பேர்; சத்தீஸ்கரில், 2,152 பேர்; ஆந்திராவில், 2,014 பேர்; கேரளாவில், 1,989 பேர்; தமிழகத்தில், 1,606 பேர் தற்கொலை செய்துள்ளனர்.குஜராத்தில், 1,483 விவசாயிகளும்; உ.பி.,யில், 1,266 விவசாயிகளும், கடன் மற்றும் வறட்சி காரணமாக தற்கொலை செய்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பட்டியலில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையை மறுத்துள்ள குஜராத் அரசு, தங்கள் மாநிலத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 91 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளது.

மூலக்கதை