அடுத்த ஜனாதிபதி யார்?: ஆலோசிக்க உத்தவ் தாக்கரேவுக்கு மோடி அழைப்பு

தினமலர்  தினமலர்
அடுத்த ஜனாதிபதி யார்?: ஆலோசிக்க உத்தவ் தாக்கரேவுக்கு மோடி அழைப்பு

புதுடில்லி: அடுத்த ஜனாதிபதியாக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து விவாதிக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்குபிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என பா.ஜ., ஆலோசனை நடத்தி வருகிறது. மாநில சட்டசபை எம்.எல்.ஏ.க்கள், பார்லி.லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.கள் ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர்.

உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள பா.ஜ. தங்களது ஆதரவு வேட்பாளரே ஜனாதிபதியாக வருவார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் செல்வாக்கு மிக்க கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆகியோருக்கு விருந்தளிக்க அழைப்பு விடுத்துள்ளார். மார்ச் 29-ம் தேதி இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., சிவசேனா பிரிந்து தனித்தனியே போட்டியிட்டன. சம பலத்தில் பா.ஜ.,வும் வென்றது. எனினும் மேயர் வேட்பாளருக்கு பா.ஜ.போட்டியிடாமல் ஒதுங்கியது. எனவே சிவசேனா கட்சியினரே மேயர்களாயினர்.
தற்போது மோடி சிவசேனா தலைவரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருப்பதன் மூலம் பிரதமர் மோடியின் மனதில் யார் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது விரைவில்தெரியவரும்.

மூலக்கதை