ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

தினமலர்  தினமலர்
ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை, 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பனீந்தர ரெட்டி, வழக்கு செலவு தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி அதிகாரியான லாரன்சுக்கு, சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக, 'மெமோ' வழங்கப்பட்டது. அதன்பின், எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

அடிப்படை உத்தரவு

ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அதன் மீது உத்தரவு பிறப்பிக்கும்படி, உயர் நீதிமன்றத்தில் லாரன்ஸ் மனு தாக்கல் செய்தார். தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கும்படி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
லாரன்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடும்படி, அரசுக்கு மாநகராட்சி ஆணையர் பரிந்துரைத்தார். ஆனால், நகராட்சி நிர்வாகத் துறை செயலர், எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இதையடுத்து, மெமோவை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் லாரன்ஸ் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டப்படி தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, நகராட்சி நிர்வாகத் துறை செயலருக்கு, 2016 மார்ச்சில் உத்தரவிட்டது. அதன்பிறகு, எந்த பதிலும் இல்லை.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும்படி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. எந்த பதிலும் இல்லாததால், நகராட்சி நிர்வாகத் துறை செயலருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனுவை, லாரன்ஸ் தாக்கல் செய்தார்.
ஆறு குற்றச்சாட்டுகள்
மனுவை விசாரித்த, நீதிபதி ராஜா பிறப்பித்த உத்தரவு:
அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கும் போது, நிபந்தனையற்ற மன்னிப்பு கோராமல், பதில் மனுவை, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தாக்கல் செய்துள்ளார். அதில், புதிதாக விசாரணை நடத்தியதில், ஆறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகவும், லாரன்சுக்கு ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
துறை செயலரின் நடவடிக்கையை பார்க்கும் போது, நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார். ஓராண்டாக, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, விளக்கம் அளிக்கும்படி, அவருக்கு உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி, அதிகாரி பனீந்தர ரெட்டி ஆஜரானார். கால தாமதமாக அமல்படுத்தியதற்காக, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, நீதிமன்றம் உணர்த்திய பிறகே, மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்கும், அரசுக்கு ஏற்படுத்திய வழக்கு செலவு தொகைக்கும், இது ஈடாகாது.
நீதிமன்றத்தின் கண்ணியத்தையும், மாண்பையும் காக்க வேண்டிய கடமை, நீதிமன்றத்துக்கு உள்ளது. நீதிமன்ற அவமதிப்புக்கான அதிகாரத்தை பயன்படுத்தி, உத்தரவை அமல்படுத்த, நீதிமன்றம் தயங்கக் கூடாது.
இல்லையென்றால், வழக் கில் வெற்றி பெற்றவர்கள், நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவர். அதோடு, நீதிமன்ற நடவடிக்கைகளும் அர்த்தமற்றதாகி விடும். எனவே, அதிகாரி பனீந்தர ரெட்டிக்கு எதிராக, துறை நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிட முடியும் என்றாலும், அதை மேற்கொள்ளவில்லை. அதிகாரிக்கு, 50 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை விதிக்கப்படுகிறது.
நான்கு வாரங்களில், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு, அவர் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை