ரூ.9000 கோடி கடன் மோசடி: விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூ.9000 கோடி கடன் மோசடி: விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி

லண்டன்- தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது நிறுவனத்துக்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளிடம் வாங்கிய கடன் ரூ. 9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இதுதவிர காசோலை மோசடி, சேவை வரி பாக்கி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

ஆனால் வழக்குகளில் ஆஜராகாத மல்லையா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டன் தப்பிச்சென்றார். இவரை நாடு கடத்த இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தை பயன்படுத்த மும்பை சிறப்பு நீதிமன்றம், அனுமதி அளித்தது.

இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அமலாக்கத்துறை அனுப்பியது. இதை தொடர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே கூறுகையில்: விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான இந்தியாவின் கோரிக்கையை, இங்கிலாந்து அரசின் உள்துறை அலுவலகம் ஆய்வு செய்து வருவதாக கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மல்லையாவை நாடு கடத்தும் கோரிக்கையை, வாரன்ட் பிறப்பிப்பதற்காக மாவட்ட நீதிமன்றத்துக்கு அந்நாட்டு அமைச்சர் அனுப்பியுள்ளார். அங்குள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி, மல்லையாவை நாடு கடத்துவதற்கான உத்தரவை பிறப்பிப்பது பற்றி முடிவு செய்வார்.

இவ்வாறு கோபால் பாக்லே கூறினார்.

.

மூலக்கதை