என் மனைவியின் சொத்து மதிப்பு தெரியாது: பரூக் அப்துல்லா

தினமலர்  தினமலர்
என் மனைவியின் சொத்து மதிப்பு தெரியாது: பரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்:தனது மனைவியின் சொத்து விவரங்கள் எதுவும் தனக்குத் தெரியாது என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், அனந்த்நாக் லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்ரல் 9 மற்றும் 12ஆம் தேதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பரூக் அப்துல்லா, ஜம்முகாஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தியின் சகோதரர் முப்தி தஸாதக் ஹுசைன் உள்பட 5 கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சொத்து கிடையாது


இவர்களில், ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிடும் பரூக் அப்துல்லா, தனது சொத்துகளின் மதிப்பு ரூ.14 கோடி என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தனது மனைவி, 1990ஆம் ஆண்டில் இருந்து லண்டனில் வசித்து வருவதால், அவரது சொத்து மதிப்பு தனக்குத் தெரியாது என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.மேலும், ஜம்முகாஷ்மீரில் தனது மனைவிக்கு சொத்து எதுவும் கிடையாது என்றும் அவர் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் லோக்சபா தொகுதியில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) சார்பில் முப்தி தஸாதக் ஹுசைன் போட்டியிடுகிறார். அவர், தனது அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.24 கோடி என்று தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவி ராதிகா கபூரின் சொத்து மதிப்பு ரூ.11 கோடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை