சசி, பன்னீர் அணியினருக்கு... புதிய சின்னம்!

தினமலர்  தினமலர்
சசி, பன்னீர் அணியினருக்கு... புதிய சின்னம்!

சசி மற்றும் பன்னீர் அணியினருக்கு, இரட்டை இலை சின்னத்தை வழங்க மறுத்ததோடு,
அ.தி.மு.க., பெயரை பயன்படுத்தவும் தடை விதித்த தேர்தல் கமிஷன், இரண்டு அணியினருக்கும், புதிய சின்னம் ஒதுக்கியுள்ளது. புதிய கட்சி பெயர்களையும், அவர்களுக்கு வழங்கி உள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல், நேற்று நிறைவு பெற்றது. சசிகலா அணி சார்பில், துணை பொதுச் செயலர் தினகரன்; பன்னீர் அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன், மனு தாக்கல் செய்துள்ளனர்.
இரு அணியினரும், இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தனர். இரு தரப்பினரிடமும், நேற்று முன்தினம் நேரடி விசாரணை நடத்தப்பட்டது.

தடை

இரு தரப்பிலும், பிரபல வக்கீல்கள் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட, தேர்தல் கமிஷன், இரவு, 11:00 மணிக்கு, இரட்டை இலை சின்னத்தை, தற்காலிகமாக முடக்கி வைத்து உத்தரவிட்டது. அத்துடன் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., என்ற பெயரை பயன்படுத்தவும், தடை விதித்தது.

இரு அணியினரும், தங்கள் புதிய கட்சிக்கான பெயரையும், தாங்கள் போட்டியிட விரும்பும், மூன்று சின்னங்களையும், தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.அதன்படி, நேற்று காலை, இரு அணி தலைவர்களும், வழக்கறிஞர்களுடன், டில்லி சென்றனர். தங்கள் கட்சி பெயர் மற்றும் தாங்கள் விரும்பும் சின்னங்கள் விபரத்தை, தேர்தல் கமிஷனில் தெரிவித்தனர்.

சசி அணியினர், தங்கள் கட்சிக்கு, 'அ.தி.மு.க., அம்மா' என்ற பெயரையும், சின்னமாக, 'ஆட்டோ ரிக் ஷா, தொப்பி, கிரிக்கெட் பேட்' ஆகியவற்றில் ஒன்றை ஒதுக்கும்படியும் பரிந்துரை செய்தனர்.
அவற்றை பரிசீலனை செய்த தேர்தல் கமிஷன், சசி அணிக்கு, ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியது; அதை, தினகரன் ஏற்றுக் கொள்ளவில்லை. தொப்பி சின்னத்தை ஒதுக்கும்படி கோரினார்; அதை, தேர்தல் கமிஷன் ஏற்றது. மேலும், சசி அணியினர், 'அ.தி.மு.க., அம்மா' என்ற கட்சி பெயரை பயன்படுத்தவும், அனுமதி அளித்தது.

பன்னீர் அணியினர், தங்கள் கட்சிக்கு, 'அ.தி.மு.க., புரட்சி தலைவி அம்மா' என்ற பெயரை பரிந்துரைத்தனர். மூன்று சின்னங்களை பரிந்துரைக்காமல், ஒரே சின்னமான, 'இரட்டை விளக்கு மின் கம்பம்' சின்னத்தை மட்டும் கோரினர்.

தீவிர பிரசாரம்

அவர்கள் கேட்டபடி, கட்சி பெயர் மற்றும் இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டது. இரு அணியினரும், கட்சி பெயரில், ஜெயலலிதா பெயர் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர்.இரு அணியினருக்கும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய சின்னத்தை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஜெ., மறைவுக்கு பின், கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் ஆதரவு, எந்த அணிக்கு உள்ளது என்பதை உணர்த்தும் களமாக, ஆர்.கே.நகர் அமைந்து உள்ளதால், இரு அணியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

இரண்டாவது முறையாக இரட்டை இலை முடக்கம்!

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜெ., அணி, ஜானகி அணி என, அ.தி.மு.க., பிளவுபட்டது. அதன் காரணமாக, 1989ல், இரட்டை இலை முடக்கப்பட்டது. அந்த ஆண்டு நடந்த தேர்தலில், ஜெ., அணிக்கு சேவல், ஜானகி அணிக்கு, இரட்டை புறா சின்னம் ஒதுக்கப்பட்டது. தேர்தலுக்கு பின், இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்து, இரட்டை இலை சின்னத்தை மீட்டனர்.தற்போது, 28 ஆண்டுகளுக்கு பின், இரண்டாவது முறையாக, இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது.

ஜெ., விரும்பிய சின்னம்!

கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர வந்த கட்சிகளிடம், அ.தி.மு.க., சின்னமான இரட்டை இலையில் போட்டியிடுவதாக இருந்தால் மட்டுமே, 'சீட்' என, நிபந்தனை விதித்தார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால், எளிதாக வெற்றி பெறலாம் என்பதால், கூட்டணி கட்சிகளுக்கு, இந்த நிபந்தனையை ஜெயலலிதா விதித்ததாக, அப்போது, அ.தி.மு.க., நிர்வாகிகள்தெரிவித்தனர்.இப்போது, அவரது கட்சியினரே, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாமல், சுயேச்சை சின்னத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை