தி.மு.க.–அ.தி.மு.க. கடும் அமளி!!!

PARIS TAMIL  PARIS TAMIL
தி.மு.க.–அ.தி.மு.க. கடும் அமளி!!!

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் உதயசூரியன் (தி.மு.க.) கலந்துகொண்டு பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:–

உதயசூரியன் பெயரை...

உதயசூரியன்(தி.மு.க.):– எந்த குறுக்கீடும் இல்லாமல் பேச விரும்புகிறேன். நேற்றைய (நேற்று முன்தினம்) விவாதத்தில் எங்கள் உறுப்பினர் செங்குட்டுவன் பேசும்போது நீங்கள் (சபாநாயகர்) குறுக்கிட்டு, சீக்கிரம் முடியுங்கள் என்றீர்கள். அதேபோல் இன்றைக்கும் நீங்கள் உதயசூரியன் முடியுங்கள், உதயசூரியன் வேறு வி‌ஷயம் குறித்து பேசுங்கள் என்று, என் பெயரை தொடர்ந்து கூறாதீர்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கிற நேரத்தில் உதயசூரியன் பெயரை உச்சரித்தற்காக மாலையில் உங்கள் மீது கேள்வி வந்து விடப்போகிறது.

சபாநாயகர்:– நீங்கள் முதலில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசுங்கள்.

உதயசூரியன்(தி.மு.க.):– முன்பு பட்ஜெட் தாக்கல் செய்யும்போது ஒரு சிறிய பையை கொண்டு வந்து தாக்கல் செய்வார்கள். எங்களுடைய தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், ஓ.பன்னீர்செல்வம் கூட சாதாரண முறையில்தான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்கள். இப்போது பட்ஜெட் எப்படி கொண்டு வரப்பட்டது? என்று கூறிவிட்டு சில வார்த்தைகளை அவர் தெரிவித்தார்.

அந்த வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

அமைச்சர் டி.ஜெயக்குமார்:– உறுப்பினர் இங்கே தெரிவித்து இருக்கிற....

அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் உறுப்பினர் பெயரை கூறும்படி கூறினர்.

ஓ.பி.எஸ். ‘சீன்’ போடுகிறார்

அமைச்சர் ஜெயக்குமார்:– அவர்தான் பெயரை சொல்லக்கூடாது என்று கூறி விட்டாரே... இருந்தாலும், உறுப்பினர் ரைசிங் சன் (உதயசூரியன்) இங்கே குறிப்பிட்டு பேசும்போது அன்றைய காலத்தில் பைகளை கொண்டு வருவார்கள், இப்போது என்று... உறுப்பினர் சில வார்த்தைகளை தெரிவித்து இருக்கிறார். ஆரம்ப காலத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் வரவு–செலவு தாக்கல் செய்யப்படும்.

ஆனால் தற்போது ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரவுசெலவு தாக்கல் செய்யப்படுகிறது. அதனால் அதற்கு தகுந்த அளவில் காகிதங்கள் இருக்கும். பல்வேறு விளக்கங்கள் இருக்கும். அதற்காகவே நாங்கள் அவ்வாறு வருகிறோம். மேலும் உறுப்பினர் பேசும்போது ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி கூறினார். ஓ.பி.எஸ். ‘சீன்’ போடுபவர். நடிப்பில் சிவாஜி கணேசனையே மிஞ்சி விடுவார். ஓ.பி.எஸ். போல நாங்கள் ஆஸ்கர் அவார்டு வாங்கும் அளவு நடிகர் அல்ல.

இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டதும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கே.பாண்டியராஜன், செம்மலை, மாணிக்கம், எஸ்.பி. சண்முகநாதன் உள்ளிட்டோர் எழுந்து நின்று, அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வாசகத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்கள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.

அப்போது அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க. உறுப்பினர்களையும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களையும் பார்த்து சைகையில் ஏதோ தெரிவித்தார். இதனால் தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

திட்டங்கள்

உறுப்பினர் உதயசூரியன்:– 1989–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பட்ஜெட் குறித்து திருநாவுக்கரசர் (ஜெயலலிதா அணி) பேசும்போது, கஜானாவும் காலி, களஞ்சியமும் காலி எப்படி திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என்று கேட்டார். அதற்கு கருணாநிதி, என் மூளை காலியாகவில்லை என்றார். ஆனால் இன்றைக்கு நிதி அமைச்சர் பட்ஜெட் படிக்கிறார்....

அமைச்சர் ஜெயக்குமார்:– இந்த பட்ஜெட்டில் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். 17 ஆண்டுகள் மத்திய ஆளும் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்து இருந்தது. அப்போதே தமிழகத்துக்கு வேண்டியதை பெற்று இருந்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கும்.

(இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது)

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:– உறுப்பினர் உதயசூரியன் சில கருத்துகளை கூறினார். அதற்கு பதில் சொல்லுவதை விட்டுவிட்டு அமைச்சர் வேறு எதையோ பேசுகிறார். நாங்கள் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்தபோது எத்தனையோ நல்ல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். தங்க நாற்கர நெடுஞ்சாலை திட்டம், மதுரவாயல் மேம்பால திட்டம், கத்திப்பாரா மேம்பாலம், மெட்ரோ ரெயில் என்று எத்தனையோ திட்டங்களை சொல்லலாம்.

ஜெயலலிதா சமாதியில் பட்ஜெட்

ஒரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அதன் ரகசியம் காக்கப்பட வேண்டும். ஆனால் நிதி அமைச்சர் அதை தாக்கல் செய்வதற்கு முன்பே அதை வெளியே எடுத்து செல்ல என்ன உரிமை இருக்கிறது. நான் தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் பார்த்தேன். அவர் பட்ஜெட்டை எங்கு எடுத்துச் சென்றார் என்பதை எல்லாம் காட்டினார்கள்.

அமைச்சர் ஜெயக்குமார்:– ரகசியங்களை வெளியே சொல்லக்கூடாது என்று உறுதிமொழி எடுத்து இருக்கிறோம். பெரியவர்களிடம் வாழ்த்து பெற வேண்டும் என்ற முறையில்தான் அம்மாவின் சமாதிக்கு எடுத்து செல்லப்பட்டதே தவிர எந்த ரகசியங்களும் வெளியாகவில்லை. இது சாதாரண வி‌ஷயம். பட்ஜெட்டை வெளியில் காட்டி அது பத்திரிகைகளில் செய்தியாக முன் கூட்டியே வெளியாகி இருந்தால் தான் தவறு. அவ்வாறு நடந்திருந்தால் நானே பொறுப்பு ஏற்பேன். ஜெயலலிதா சமாதியில் வைக்கப்பட்டிருந்த சூட்கேசில் என்ன இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

கடும் அமளி

மு.க.ஸ்டாலின்:– அப்படியென்றால் நீங்கள் வெறும் சூட்கேசைத்தான் வைத்தீர்களா? அதில் பட்ஜெட் இல்லையா? பத்திரிகைகளில், தொலைக்காட்சியில் நான் அவ்வாறு தான் பார்த்தேன். பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு அதை வெளியே எடுத்துச் சென்றது விதிமீறல் தான். இதுபற்றி நாங்கள் கவர்னரிடம் புகார் கொடுத்து இருக்கிறோம்.

(இந்த நேரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று நேருக்கு நேர் பேசிக்கொண்டனர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. தி.மு.க. உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, கே.பி.கே.சாமி ஆகியோர் எழுந்து நின்று சில கருத்துகளை கூறினர். சபாநாயகர் அனைவரையும் எச்சரித்து அமைதிப்படுத்தினார்.)

அமைச்சர் ஜெயக்குமார்:– ஜெயலலிதா சமாதிக்கு சென்று ஆசி பெறுவது விதிமீறல் செயல் அல்ல. (இவ்வாறு கூறி விட்டு ஒரு கருத்தை தெரிவித்தார்).

மு.க.ஸ்டாலின்:– அவரது அம்மாவிடம் ஆசி பெற வேண்டும் என்றால் அவர் மட்டும் தனியாக சென்று இருக்கவேண்டும். பட்ஜெட்டை கொண்டு சென்றது மரபு மீறலாகும்.

அமைச்சரின் பேச்சு நீக்கம்

அப்போது அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க. ஆட்சி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இந்த கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து நேருக்கு நேர் அமைச்சருடன் விவாதித்தார். இருவரும் ஆவேசமாக கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். அமைச்சரின் கருத்தை நீக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இதனால் கூச்சல், குழப்பத்துடன் கடும் அமளியும் ஏற்பட்டது.

அவை முன்னவர் செங்கோட்டையன்:– அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுகிறேன்.

சபாநாயகர் தனபால்:– இருவரின் கருத்துகளும் நீக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அமைதியானார்கள். அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் குறித்து அமைச்சர் பேசிய கருத்தை நீக்க வலியுறுத்தி அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மூலக்கதை