காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!!!

PARIS TAMIL  PARIS TAMIL
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!!!

காவிரி நீர் பங்கீடு வழக்கில், நடுவர்மன்றம் 2007–ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுவை அரசுகள் மேல்முறையீடு செய்துள்ளன. அந்த மேல்முறையீடுகள் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, பரமசிவம் ஆகியோர் ஆஜராகினர். விசாரணை தொடங்கியதும், மூத்த வக்கீல் சேகர் நாப்டே, ‘கேரள அரசு அட்டப்பாடி பகுதியில் தடுப்பணை கட்டப் போவதாக அறிவித்துள்ளது. இது எங்களுக்கு மிகுந்த ஆதங்கத்தை அளிக்கிறது. அவர்கள் அந்த தடுப்பணையில் எத்தனை கொள்ளளவு தண்ணீரை தேக்கப்போகிறார்கள் என்பது தொடர்பாக எங்களுக்கு ஆதங்கம் உள்ளது’ என்று கூறினார்.
கேரளா புகார்

இதற்கு கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா, தமிழக அரசுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைத்து வருகிறது. கேரளாவுக்கு நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை பெறுவதற்கான அனைத்து உரிமையும் உள்ளது. ஆனால் தமிழக அரசு எங்களுக்கான தண்ணீரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது என்று கூறினார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

காவிரி நடுவர் மன்றம் வரையறுத்த தண்ணீர் அளவுக்கு மீறி கேரளா உபரியான தண்ணீரை உபயோகிக்கக் கூடாது. மேலும் கேரளாவில் உபயோகப்படுத்தப்படும் தண்ணீரின் அளவு, தடுப்பணை குறித்த முக்கியமான ஆவணங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசுடன் கேரளா பகிர்ந்து கொள்ள வேண்டும்.
தினசரி விசாரணை

காவிரி உள்ளிட்ட அனைத்து வழக்குகள் மற்றும் இவை தொடர்பான இடைக்கால மனுக்கள் ஜூலை 11–ந் தேதியில் இருந்து தொடர்ந்து 15 பணிநாட்களுக்கு விசாரிக்கப்படும். செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இறுதி விசாரணை நடைபெறும். அனைத்து தரப்பினரும் 15 நாட்களில் தங்கள் வாதங்களை முடித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
2 ஆயிரம் கன அடி

இடையில் கர்நாடக அரசு வக்கீல் பாலி நாரிமன் குறுக்கிட்டு, ‘மீண்டும் தண்ணீர் திறந்து விடுமாறு தயவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டாம். எங்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் இல்லை’ என்று கூறினார்.

இதற்கு தமிழக அரசு வக்கீல், ‘ஏற்கனவே இவர்கள் இத்தனை இடைக்கால உத்தரவு அளித்தும் தண்ணீரை திறந்து விடாமல் இருக்கிறார்கள். எங்களுக்கு நம்பிக்கை, ஆறுதல் எல்லாம் வேண்டாம். தண்ணீர்தான் வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள், ‘கடந்த ஜனவரி நான்காம் தேதியன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரையில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மூலக்கதை