மாநகராட்சி தேர்தலை குறி வைத்து அவசரமாக அங்கீகாரமற்ற காலனிகளுக்கு நிதி ஒதுக்கீடு: ஏஏபி அரசு மீது அஜய் மாகென் தாக்கு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: அங்கீகாரமற்ற காலனிகளுக்கு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை, கடைசி நிமிடத்தில் வாரியிறைக்கிறது ஆம் ஆத்மி அரசு என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு கூறியுள்ளது. இது பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்து டெல்லி பிரிவு காங்கிரஸ் தலைவர் அஜய் மாகென் கூறியிருப்பதாவது: பாஜ ஆட்சி பொறுப்பில் உள்ள மூன்று மாநகராட்சிகளிலும் ஏறக்குறைய 1,639 அங்கீகாரமற்ற காலனிகள் உள்ளன. அந்த காலனிகளுக்கு அங்கீகாரம் அளிக்க செயல் திட்டம் வகுக்கும்படி கூறப்பட்டது. அதன்படி, 53 காலனிகள் மட்டும் அங்கீகாரம் பெற்றுள்ளன.இந்நிலையில், டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைவதற்கு முன்னர், தொடர்ந்து 15 ஆண்டுகள் (காங்கிரஸ்) ஆட்சி நடத்தினோம். அங்கீகாரமற்ற 895 காலனிகள் அப்போது வரண் செய்யப்பட்டன. மேலும் 2007ம் ஆண்டு தொடங்கி 2013ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், குடிசைப்பகுதிகள், சேரிகள் மற்றும் அங்கீகாரமற்ற காலனிகளுக்கு ரூ.4,200 கோடி அளவில் நிதியை முதல்வர் ஷீலா தீட்சித் ஒதுக்கீடு செய்தார். டெல்லியின் மொத்த மக்கள் தொகையில், 40 சதவீதத்தினர் குடிசைப் பகுதி மற்றும் அங்கீகாரமற்ற காலனிகளில் உள்ளனர். ஆட்சி அமைத்த ஓர் ஆண்டுக்குள் காலனிகளை வரண்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், இன்றுவரை ஒரு காலனியைக் கூட வரண்படுத்தி அறிவிக்கவில்லை.மாநிலத்தை ஆள்வதில் கெஜ்ரிவாலுக்கு மனதில்லை. அலுவலகத்திற்கும் அவர் வருவதில்லை. டெங்கு, சிக்குன்குனியா போன்ற தொற்று நோய்களால் குடிசைகளில் (ஜுக்கி) வசிப்போர் கடந்த சில ஆண்டுகளாக கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். மாற்றாந்தாய் கொடுமை மற்றும் வேதனையை ஜுக்கிவாசிகள் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். அப்படி இருந்தும் அவர்கள் மீது விசேஷ கவனம் செலுத்தப்படவில்லை. ஏப்ரலில் நடைபெறவுள்ள மாநகராட்சி தேர்தலை குறிவைத்து, காங்கிரஸ் ஒதுக்கி அறிவித்த தொகையை ஆம் ஆத்மி அரசு இப்போது வாரியிறைக்கத் தொடங்கி உள்ளது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், மாநகராட்சிகளை கைப்பற்றித் தீரவேண்டும் எனும் திடீர் கரிசனத்துடன், சேரிப் பகுதிகளிலும், அங்கீகாரமற்ற காலனிகளிலும் கடைசி நிமிட நடவடிக்கையாக நாங்கள் ஒதுக்கிய நிதியை ஆம் ஆத்மி வாரியிறைக்கிறது. இவ்வாறு மாகென் குற்றச்சாட்டியுள்ளார்.

மூலக்கதை