கே.ஆர்.புரம் தொகுதி வளர்ச்சி நிதியில் முறைகேடு: முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்

பெங்களூரு:  பெங்களூரு கே.ஆர்.புரம் சட்டபேரவை தொகுதி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 840 கோடி நிதியில் நடந்துள்ள முறைகேடுகளை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட கோரி முன்னாள் எம்எல்ஏ நந்தீஷ்ரெட்டி தலைமையில் பா.ஜவினர் போராட்டம் நடத்தினர்.  இப்போராட்டத்தில் கலந்து கொண்ட நந்தீஷ்ரெட்டி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதிக்கு உள்பட்ட ஹொரமாவு பகுதியில் 6 மாதங்களில் முடிக்க வேண்டிய சுரங்க ரயில் பாதை பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. முடிக்காமல் வேண்டும் என்றே அலட்சியப்படுத்தி வருகிறார். இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. சுரங்க ரயில் பாதையை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அமைச்சர் சதானந்தகவுடா சம்பந்தப்பட்ட ரயில்வே துறை அதிகாரிகள், தொகுதி எம்.எல்.ஏ கூட்டம் நடத்தினார். ஆனால் எம்.எல்.ஏ வேண்டும் என்றே கூட்டத்தை புறக்கணித்தார். கே.ஆர்.புரம் தொகுதியின் வளர்ச்சிக்காக மாநில அரசு ரூ. 840 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். ஆனால் தொகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. அதே போல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் வளர்ச்சி பணிகள் தரமற்றதாகவுள்ளது. இப்படியிருக்கும் போது எப்படி ரூ. 840 கோடி நிதி பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிகிறது. இதனால் இதை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

மூலக்கதை