ஏடிஎம்மில் எடுத்த ரூ.2000 நோட்டின் மீது ‘சில்ரன்ஸ் பேங்க் ஆப் இந்தியா’ வாசகம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: டெல்லியை சேர்ந்தவர் ரோகித் குமார். வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரியான இவர், கடந்த 6ம் தேதி சங்கம் விகார் பகுதியிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் ஒன்றிற்கு பணம் எடுக்க சென்றார். அங்கு ஏடிஎம்மில் நான்கு ரூ.2000 நோட்டுக்களை எடுத்தார். அந்த நோட்டுகளில் அதிகாரபூர்வ வாட்டர் மார்க் உள்ள இடத்தின் மீது சுரன் லேபிள் ஒட்டப்பட்டு இருந்தது. அதேபோன்று ரிசர்வ் வங்கியின் ஸ்டாம்ப் உள்ள இடத்தில் “பிகே” என குறிப்பிடப்பட்டு இருந்ததோடு, மேல் பக்க இடது மூலையில் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக “பாரதிய மனோரஞ்சன் வங்கி” எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து ரோகித் குமார், போலீசில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த குறிப்பிட்ட ஏடிஎம்மிற்கு சென்று தனது ஏடிஎம் அட்டையின் மூலம் பணம் எடுத்தார். அப்போது அவருக்கு ஏடிஎம்மில் கிடைத்த நோட்டின் மீது “சில்ரன் பாங்க ஆப் இந்தியா” என எழுதப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவத்தையடுத்து, மோசடி வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். மேலும், ஏடிஎம் இயந்திரத்தில் கடைசியாக பணம் நிரப்பிய நபர் யார் என்பதை அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். அதன்பின், இதுவரை வேறு எந்த புகாரும் வரவில்லை. அந்த கட்டுகளுக்கு இடையில் ஒருசில நோட்டுகள் அதுபோன்று இடைசெருகலாக திணிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மூலக்கதை