சாலைகளை சுலபமாக கடப்பதற்கு பெங்களூருவில் 18 ஸ்கைவாக்குகள் அமைக்கப்படும் : அமைச்சர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்

பெங்களூரு: பெங்களூரில் வாகன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் சாலைகளை கடக்க வசதியாக நகரில் 18 இடங்களில் ஸ்கைவாக் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது என பெங்களூரு மாநகர மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் கூறினார். பெங்களூரு பழைய ஏர்போர்ட் சாலை, தொம்மளூருக்கு உட்பட்ட சாலையில், அமைக்கப்பட்டுள்ள ஸ்கைவாக்கை நேற்று அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், பெங்களூரு நகரில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதற்கு தகுந்தாற்போல், வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. வாகன நெரிசல் அதிகரிக்கத்தொடங்கியிருப்பதால் சாலைகள் கடக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். அதன்படி வாகனங்கள் அதிகரித்துள்ள இடங்களில் பொதுமக்களின் சாலைகளை கடக்க ஏதுவாக ஸ்கைவாக்குகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. ஏற்கனவே வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஸ்கைவாக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தொம்ளூரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கைவாக் ஒன்பதாவதாகும். இவற்றை தவிர பெங்களூரு நகரில் மேலும், 18 இடங்களில் ஸ்கைவாக்குகள் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன நெரிசல்கள் அதிகமாக உள்ள பல்லாரி சாலை, எஸ்டீம் மால், டபுள்ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் குறுக்கே ஸ்கைவாக்குகள் அமைக்கப்படும். தனியார் அமைப்புகள் உதவியுடன் இந்த ஸ்கைவாக்குள் அமைக்கும்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தனியார் அமைப்புகள் சார்பில் ஸ்கைவாக்குகள் அமைக்கப்பட்டாலும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்கைவாக்குகள் அமைக்கும் ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு கண்காணிக்கிறது. மேலும், ஸ்கைவாக்குகள் மூலம் விளம்பரம் போன்ற வருவாய்களை மாநகராட்சி நிர்வாகமே கண்காணிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

மூலக்கதை