தலைநகரின் வளர்ச்சிப் பணிகள் முடக்கம் 3 மாநகராட்சிகள் மீது ஏஏபி புகார்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: சட்டமன்ற உறுப்பினர்களால் தொடங்கப்படும்  தொகுதி மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் கட்சியைச் சேர்ந்த  வார்டு உறுப்பினர்கள் கவனம் செலுத்திவரும் வளர்ச்சிப் பணிகளை பாஜவின் ஆளுகையில் உள்ள மூன்று மாநகராட்சிகளும் முடக்குவதில் குறியாக உள்ளன என ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டி உள்ளது. மாநகராட்சிகளின் போக்கு பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்து தெற்கு மாநகராட்சி (எஸ்டிஎம்சி) 142வது வார்டு கவுன்சிலரும், ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) உறுப்பினருமான பூனம் பரத்வாஜ் கூறியதாவது: எஸ்டிஎம்சியில் ரூ.70 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது. அப்படி இருந்தும், ஒப்பந்ததாரர்கள் பணியை இதுவரை தொடங்கவில்லை. இது தொடர்பாக எஸ்டிஎம்சி கமிஷனருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் பலனில்லை. எனவே, அதில் ஏதோ சதி நடந்திருப்பதாக ஆம் ஆத்மி கருதுகிறது. மூன்று மாநகராட்சியிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. வளர்ச்சிப் பணிகளை தேக்கி வைக்க வேண்டும் என பாஜ ஆளும் மாநகராட்சிகள் கருத வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஏஏபி ஒருங்கிணைப்பாளர் திலீப் பாண்டேவும், பரத்வாஜின் கருத்தை ஆமோதித்தார். ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்ட வார்டுகளில், ஆக்கபூர்வ பணிகளை முடக்கப்பட்டு வருகிறது என அவர் குறை கூறினார். குடிநீர் வாரியம் மூலமாக தொகுதியில் கழிவுநீர் சாக்கடை அமைத்தல் மற்றும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டி, சாலையோரங்களில் பள்ளம் எடுக்க பணிகள் அறிவித்தோம். அறிவித்தபடி பணிகளை தொடங்க முயன்றாலும், அதற்கான தடையில்லா சான்று வழங்க மாநகராட்சி மறுக்கிறது என திலக் நகர் ஏஏபி எம்எல்ஏ ஜர்னைல் சிங் குற்றஞ்சாட்டினார்.மாநகராட்சி தரப்பில் 28 திட்டங்களுக்கு தடையில்லா சான்று வழங்கப்படவில்லை என தெரிவித்த அவர், ‘ஒரு சில திட்டங்களை நிறைவேற்றிய பின்னர், தோண்டப்பட்ட பள்ளங்களை மூட, காசோலை அளித்தாலும், மாநகராட்சி தரப்பில் அவற்றை மூடுவதில்லை. பணத்தை பெற்றுக் கொண்டு பணியை பூர்த்தி செய்யாமல் மாநகராட்சி மெத்தனபோக்கு கடைபிடிக்கிறது’, என மேலும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.பரஸ்பர குற்றச்சாட்டு ஏன்?டெல்லியின் கிழக்கு, தெற்கு, வடக்கு என 3 மாநகராட்சிகளுக்கும் வரும் ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநகராட்சிகளில் ஆட்சி பொறுப்பில் பா.ஜ. உள்ளது. ஆனால், டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இந்த மூன்று அரசியல் கட்சிகளிடையே பரஸ்பரம் குற்றச்சாட்டு எழுப்புவது, போராட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது போன்ற நிகழ்ச்சிகள் தினந்தோறும் டெல்லியில் களைகட்டத் தொடங்கி உள்ளது. இந்த களேபரம் எல்லாம் தேர்தல் நெருங்குவதால் மக்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் நாடகங்கள் தான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

மூலக்கதை