சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வின் இடையே நீரிழிவு மாணவர்களுக்கு சிற்றுண்டி தர அனுமதி

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும்போது, இடையே சிற்றுண்டி சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் தங்களது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருப்பது அவசியம். எனவே அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இன்சுலின் ஊசிகள் எடுத்துக்கொள்வது முக்கியம். மேலும், அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளதால் சர்க்கரை, மாத்திரைகள், பழங்கள், சிற்றுண்டிகள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை பொதுத்தேர்வு எழுதும் அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தேர்வுக்கு இடையே அவற்றை சாப்பிடவும் அனுமதி அளிக்கப்படும். இதனால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது நிலை குறித்து பள்ளி முதல்வர் மூலம் சம்பந்தப்பட்ட தேர்வுகூட கண்காணிப்பாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை