பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி கைதான பாஜ பிரமுகர் பற்றி மோடி வாய் திறக்காதது ஏன்? லாலு மகன் தேஜஸ்வி பாய்ச்சல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி கைதான பாஜ பிரமுகர் பற்றி மோடி வாய் திறக்காதது ஏன்? லாலு மகன் தேஜஸ்வி பாய்ச்சல்

பாட்னா- பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக மத்திய பிரதேசத்தில் பாஜ பிரமுகர் ஒருவர் கைதானது குறித்து பிரதமர் மோடி ஏன் வாயே திறக்கவில்லை என பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி கேட்டுள்ளார். பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் அடிக்கடி ஏதாவது பரபரப்பாக பேசி சர்ச்சைகளில் சிக்குவதுண்டு.

தந்தையின் பாணியில் அவரது மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத்தும் இப்போது காட்டமாக பேசி வருகிறார். பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் பாஜ பிரமுகர் துருவ் சக்சேனா உள்பட 11 பேர் தீவிரவாத தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் மத்திய பிரதேச பாஜ தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘தன்னை எப்போதும் 56 அங்குல மார்புக்கு சொந்தக்காரர் என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, இந்த விஷயத்தில் வாயை திறக்காதது ஏன்? பாஜ தலைவர்களுக்கும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐக்கும் உள்ள தொடர்பு பற்றி ஏன் மோடி மவுனம் சாதித்து வருகிறார்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் சிக்கிய துருவ் சக்சேனா என்பவர், அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுடன் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியும் பாஜவை கடுமையாக விமர்சித்து வருகிறது.


.

மூலக்கதை