ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 10 பேர் பதவி பறிபோகுமா?

தினமலர்  தினமலர்
ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 10 பேர் பதவி பறிபோகுமா?

நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, 11 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிபோகுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது..

ஓட்டு



சட்டசபையில், முதல்வர் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர்.

கட்சி கொறடா உத்தரவை மீறியதால், இவர்களின் எம்.எல்.ஏ., பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, சட்ட நிபுணர்கள் கூறியதாவது:முதலில், கட்சி கொறடா நியமனம் குறித்தே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்., அணியில் இருந்து, கொறடாவாக செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், கொறடாவாக ராஜேந்திரன் உள்ளார் என, முதல்வர் தரப்பில் கூறப்படுகிறது.

கொறடாவுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டியது, கட்சியின் பொதுச் செயலர். அவரும், தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நியமனம் குறித்தும், தேர்தல் ஆணையத்தில் பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ., பதவியை பறிக்க வேண்டும் என்றால், ஓட்டெடுப்பு நடந்த நாளில் இருந்து, 15 நாட்களுக்குள், சபாநாயகருக்கு, கட்சி சார்பிலோ, கொறடாவோ கடிதம் கொடுக்க வேண்டும். அதற்கு, அந்த எம்.எல்.ஏ.,விடம் இருந்து, சபாநாயகர் விளக்கம் பெற வேண்டும்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை பொறுத்தவரை, அ.தி.மு.க.,வை விட்டு நீக்கியிருப்பதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கொறடா உத்தரவு



சமாஜ்வாதி கட்சியில் இருந்து அமர்சிங், ஜெயப்பிரதா ஆகியோர் நீக்கப்பட்டபோது, கொறடா உத்தரவு பொருந்தாது எனக்கோரி தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 11 எம்.எல்.ஏ.,க்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால், அதுவே பல சிக்கல்களை ஏற்படுத்தும். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் பட்சத்தில், அவர்களுக்கு சாதகமான அம்சங்கள் நிறைய உள்ளன.
இவ்வாறு சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
- நமது நிருபர் -

மூலக்கதை