நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம்

PARIS TAMIL  PARIS TAMIL
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம்

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க இன்று தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

இதனால், சட்டபை களேபரமானது. மைக்குகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து இருமுறை சபை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அவையில் தொடர்ந்து அமளி நீடித்ததால் திமுக உறுப்பினர்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

இதன்பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததால், எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபித்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 11 வாக்குகள் விழுந்தன.

இதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:- “ தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும். எனவே இறுதியில் தர்மமே வெல்லும். 15 நாட்களாக அடைக்கப்பட்டு இருந்த எம்.எல்.ஏக்களை தொகுதிக்கு அனுப்பி வையுங்கள் ஒருவாரம் கழித்து மீண்டும் சட்டப்பேரவையை கூட்டுங்கள் என்று சபாநாயருக்கு கோரிக்கை விடுத்தோம்.இரண்டாவது ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

ஆனால், சபாநாயகர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. ஜனநாயக மரபுகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மக்கள் கருத்துக்கே விடுகிறோம். சட்ட மன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களை சந்திக்க வேண்டும். துரோகம் செய்து விட்டு தொகுதிக்கு வரலாமா? என்ற நிலை எம்.எல்.ஏக்களுக்கு வரும்.  ஜெயலலிதா அணியான எங்களுக்கே வெற்றி கிடைக்கும். தேவைப்பட்டால் கவர்னரை சந்திப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை