பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!!!!

PARIS TAMIL  PARIS TAMIL
பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!!!!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கெடுப்பு சனிக்கிழமை (பிப்.18) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
மிகுந்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பிறகு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதால், அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக சட்டப்பேரவை வளாகம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு போதிய பெரும்பான்மை பலம் இருப்பதால், அமைச்சரவை மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக 10 எம்.எல்.ஏ.க்களும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ., ஆர்.நட்ராஜும் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தால் அவர்கள் மீது கட்சித்தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்களது பதவி பறிபோகவும் வாய்ப்புகள் உள்ளன.
சசிகலா ஆதரவாளரான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றது. 15 நாள்களுக்குள் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சட்டப் பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்குக் கூடும் என பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
231 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு?: 234 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதில், ஜெயலலிதாவின் மறைவால் ஒரு இடம் காலியாக உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பேரவைக்கு வர இயலாததாலும், அவையை நடத்த வேண்டியிருப்பதால் பேரவைத் தலைவர் தனபாலும் வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாது. தேவைப்படும் நிலையில் மட்டுமே பேரவைத் தலைவர் வாக்களிப்பார்.
117 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தால்...: பேரவைக் கூட்டம் தொடங்கியதும், நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வருவார். 117 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் அமைச்சரவை பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதேசமயம், அதற்குக் குறைவாக உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டு அரசு கவிழ்ந்து விடும்.
கொறடா உத்தரவு: அதிமுகவைச் சேர்ந்த 134 எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கொண்டுவரும் நம்பிக்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி அதிமுக கொறடா ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான கடிதம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாக அளிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களுக்கும் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசுக் கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவரிடம் கேட்ட போது, அனைவரும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பர் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஒரு மணி நேரத்தில் முடியும்: சட்டப் பேரவை காலை 11 மணிக்குக் கூடியதும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கான தீர்மானத்தை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்மொழிவார். இந்தத் தீர்மானத்தின் மீது அவர் உரையாற்றுவார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் தீர்மானத்தில் பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
எண்ணிக் கணிக்கும் முறையில்...: நம்பிக்கை வாக்கெடுப்பை எண்ணிக் கணிக்கும் முறைப்படி, ஒவ்வொரு பகுதியாக தீர்மானத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இதற்காக உறுப்பினர்கள் எழுந்து நிற்பர். அவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு ஆதரவா, எதிர்ப்பா என்பது உறுதி செய்யப்படும்.
சட்டப் பேரவை மண்டபம் மொத்தம் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகள் முழுவதும் ஆளும் அதிமுகவைச் சேர்ந்த 123 எம்.எல்.ஏ.க்களுக்கான இருக்கைகள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளன; நான்காவது பிரிவில் காங்கிரஸ், திமுக, சில அதிமுக உறுப்பினர்களுக்கும், ஐந்தாவது, ஆறாவது பிரிவுகளில் முழுவதும் திமுக உறுப்பினர்களுக்கும் ஏற்கெனவே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் தீர்மானத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு வாக்குகள் கணக்கிடப்பட்டு இறுதியாக முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறையை சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் மேற்கொள்வார்.
முடிவை பேரவைத் தலைவர் அறிவிப்பார்: குறைந்தது 45 நிமிஷங்கள் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு, பேரவைத் தலைவர் பி.தனபால் முடிவுகளை அறிவிப்பார்.நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த அனைத்து பேரவை நடவடிக்கைக் குறிப்புகளும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஓ.பி.எஸ்.ஸுக்கு இடம் எங்கே?


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, சட்டப் பேரவையில் மூன்றாவது பிரிவில் இரண்டாவது வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் வரிசையின் முதல் இடத்தில் அமர்ந்திருந்தார்.
இப்போது, அமைச்சரவையில் கடைசி வரிசையில் உள்ள அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு அடுத்த இடம் காலியிடமாக (81) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடமான 82-ஆவது இடம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மூன்றாவது பிரிவில் மூன்றாவது வரிசையில் 90-ஆவது இடம் முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த மற்ற உறுப்பினர்களின் இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை என்று பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரகசிய வாக்கெடுப்பு வேண்டும்


பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு தேவை என்று, சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபாலிடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணி எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக எம்எல்ஏக்கள் எஸ்.செம்மலை, க.பாண்டியராஜன், சண்முகநாதன் உள்ளிட்டோர் கடிதம் அளித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்துமாறு அவர்கள் பேரவைத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்ததாகத் தெரிகிறது. இதுவரை எந்த முடிவையும் பேரவைத் தலைவர் அறிவிக்கவில்லை. இதனால், ரகசிய வாக்கெடுப்பைத் தவிர்த்து வேறு வகையான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதனை ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.

காங்கிரஸ் இன்று முடிவு


நம்பிக்கை வாக்கெடுப்பின்போது காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பாக சனிக்கிழமை காலை முடிவு செய்யப்படும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ஒரு மணி நேரம் ஆலோசித்த பின்னர், அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கூட்டத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, கொறடா விஜயதரணி உள்பட 8 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
ராகுலுக்கு தகவல்: கூட்ட முடிவு தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது அறிவுறுத்தலுக்கு ஏற்ப காங்கிரஸின் முடிவு இருக்கும்.
இதேநேரத்தில், தில்லியில் ராகுல் தலைமையில் அண்மையில் நடைபெற்ற தமிழகத் தலைவர்கள் கூட்டத்தில், திமுக எடுக்கும் நிலைப்பாட்டை காங்கிரஸும் ஆதரிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

 
 

மூலக்கதை