உத்தரகாண்டில் 10 ஆயிரம் அடி உயரத்தில் வாக்குச்சாவடி அமைப்பு - மலையேறி சென்ற தேர்தல் அலுவலர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தரகாண்டில் 10 ஆயிரம் அடி உயரத்தில் வாக்குச்சாவடி அமைப்பு  மலையேறி சென்ற தேர்தல் அலுவலர்கள்

டேராடூன்- உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 68 சதவீத வாக்குகள் பதிவாகின.

மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.     மலைப் பகுதிகளில் வசிக்கும் குறைந்த அளவிலான மக்களுக்கும் வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அங்கு சென்று வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளனர். தெக்ரி கர்வால் தொகுதிக்கு உட்பட்ட மலைகிராமம் ஒன்றில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த கிராமத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மலையேறி சென்றுள்ளனர். தேர்தல் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பே மலையேற தொடங்கினர்.

தேர்தல் நடக்கும் இடத்தை அடைய இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாது என்பதால், சில மைல் தூரம் நடந்தும், குதிரை மீது சவாரி செய்தும் பயணம் மேற்கொண்டனர்.

உத்தரகாண்டில் தற்போது கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும், செல்லும் வழியில்  உறைபனியை கடந்தும் சென்றுள்ளனர். தரையில் இருந்து 24 கிமீ பயணம் செய்து வாக்குப்பதிவு மையத்தை அடைந்தனர்.

அங்குள்ள வாக்குசாவடியில் மொத்தம் 275 வாக்குகள் மட்டுமே உள்ளது. நேற்று முன்தினம் வெற்றிகரமாக தேர்தலை முடித்த அலுவலர்கள் நேற்று அங்கிருந்து புறப்பட்டனர்.

குறைந்த வாக்குகளே உள்ள இந்த மையத்தில், மிகுந்த சிரமங்களுக்கு இடையே வெற்றிகரமாக தேர்தலை நடத்தியது மகிழ்ச்சியை தருவதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.   

.

மூலக்கதை