தில்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!!!

PARIS TAMIL  PARIS TAMIL
தில்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களவை முன்னாள் பாஜக உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண் விஜய் தலைமையில் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தில்லியில் புதன்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு கோஷமிட்டனர்.
தில்லி மீனா பாக் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி, தேரி உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது, "எனது உயிர் ஜல்லிக்கட்டு', "தமிழக மக்களின்-இந்தியாவின் அடையாளம் ஜல்லிக்கட்டு' என்று கோஷமிட்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தருண் விஜய் கூறியதாவது: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. சங்க கால இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் உள்ளன. ஜல்லிக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே வீர மிக்க மக்களின் விளையாட்டாக பாராட்டுப் பெற்றது. ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படும் காளை சிவனின் வாகனமாகவும் திகழ்கிறது. காளையை அடக்கும் நிகழ்வானது நமது நாகரிகத்தின் ஒரு பகுதி. இது தமிழ் மக்களின், இந்திய நாட்டின் அடையாளம்.
ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு என்பது இந்தியாவின் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கலாசாரத்தின் மீதான எதிர்ப்பாகும். ஜல்லிக்கட்டை எதிர்க்கும் நபர்கள் இந்தியாவின் செறிந்த கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் அறியாதவர்கள். அவர்கள் விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படுபவர்கள். தமிழ் பாரம்பரியத்தை அவமதிப்பவர்கள்.
ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி போராட்டம் நடத்தும் தமிழக மக்களும், இளைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் காட்டுவதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதற்காக எங்கள் முழு ஆதரவையும் தர உள்ளோம்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டு வருகிறது. அது தொகுப்பாக தமிழக ஆளுநரிடம் அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்தும் முறையிடப்படும். ஜல்லிக்கட்டு நடவடிக்கையை தேசிய அளவில் ஒரு இயக்கமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றார் அவர்.

மூலக்கதை