தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் விடிய விடிய போராட்டம்

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் விடிய விடிய போராட்டம்

சென்னை : ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் (19ம் தேதி) தொடர்கிறது.

திரண்ட இளைஞர்கள்:


ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட காரணத்தால், ஜல்லிக்கட்டை இந்த ஆண்டும் நடத்த முடியாமல் போனது. ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தக்கோரியும், தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் தன்னார்வலர்கள் என, பல தரப்பினரும் போராடி வருகின்றனர். அவர்களது இப்போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.

தமிழகம் முழுவதும்...


தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 125 நகராட்சி உள்ளிட்ட 300 இடங்களுக்கும் மேல் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் செல்போன் வெளிச்சத்திலும், மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் இளைஞர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். கைக்குழந்தைகளுடன் பெண்கள் பலரும் கலந்து கொண்டது மெய்சிலிர்க்க வைத்தது. அவர்கள் நடத்தி வரும் அறவழிப் போராட்டமானது 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.

பிரதமருடன் சந்திப்பு:


ஜல்லிக்கட்டுக்கு அவசரசட்டம் இயற்றக்கோரி முதல்வர் பன்னீர் செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். மாணவர்களுடன் அரசு தரப்பில் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போரட்டத்தை தொடரும் என போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.

கல்லூரிகளுக்கு விடுமுறை:


இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இன்று முதல் விடுமுறை அறிவித்துள்ளது. இதனையடுத்து ஜல்லிகட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் போராட்டம் இன்று மேலும் வலுவடைய உள்ளது. போராட்டக்களத்தில் இன்னும் ஏராளமான மாணவர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ‛ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்; பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என அறவழியில் போராடும் இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

மூலக்கதை