ஜல்லிக்கட்டுக்கு ஏன் இந்த மல்லுக்கட்டு?

தினமலர்  தினமலர்
ஜல்லிக்கட்டுக்கு ஏன் இந்த மல்லுக்கட்டு?

ஒவ்வொரு இனத்துக்கும் தனி குணமும், பண்பாடும் உண்டு. அதில், அன்னியர் குறுக்கிடக் கூடாது. குறுக்கிட்டால், உரிமைப் போராக மட்டுமின்றி, உணர்வு போராகவும் அது மாறும். இதற்கு, ஜல்லிக்கட்டு தடை உடைக்கும் முயற்சியில், மாணவர்கள் இணைந்துள்ள தன்னெழுச்சி போராட்டத்தை கூறலாம்.

ஏன் இந்த போராட்டம்... இதற்கான காரணங்கள் என்ன... இது குறித்த சிந்தனைகளை இளைஞர்கள் பெற்றது எப்படி... என, அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு, போராட்ட களத்தில் உள்ள மாணவர்கள் கூறியதாவது:

காட்சிப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில், காளைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இருந்து, காளைகளை நீக்கி விட்டால், ஜல்லிக்கட்டுக்கு தடை இருக்காது. தடைக்கு காரணமான, 'பீட்டா' பல நாடுகளில், பல விதமான வேடங்களை போடுகிறது. அதன் கொள்கைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

கருணை கொலை

நம் நாடு, அறம் சார்ந்த நாடு. இந்து, புத்தம், சமண மதங்கள், நம்மிடையே, அறவழி சிந்தனைகளை நிறைய போதித்துள்ளன. அவை, நம் நாட்டின் பண்பாட்டுக்கு எதிராக எதையும் சொல்லவில்லை. ஆனால், நம் நாட்டு கலாசாரத்திற்கு தொடர்பில்லாத நாடுகளை சேர்ந்த அமைப்புகளும், அறத்தை போதிப்பதாக கூறி, நம் நாட்டுக்குள் நுழைகின்றன.

'பீட்டா'வும், அதன் பின்புலமாக செயல்படும், பல சமயம் சார்ந்த அமைப்புகளும், சைவ உணவு பழக்கத்தை ஊக்குவிப்பதாக கூறுகின்றன. விலங்குகளை வதைக்கக்கூடாது என்பதே, அவர்கள் கூறும் காரணம்.அதன் படி, அமெரிக்காவில் துவங்கிய, பீட்டா அமைப்பு, அங்கு, ஆதரவற்ற விலங்குகளை இரண்டு வாரங்கள் அடைத்து, யாரும் உரிமை கோராவிட்டால், கருணை கொலை செய்கிறது. அங்கு செயல்படும் விலங்கு நல அமைப்புக்கள் மீது, விதி மீறுவதாக குற்றம்சாட்டி, நீதிமன்றம் வரை சென்று, மூட வைக்கும் செயலில் ஈடுபடுகின்றன.

நம் நாட்டில், தெரு விலங்குகளை கொல்லக்கூடாது; தெரு நாய்களுக்கு, கு.க., ஆப்பரேஷன் செய்யக்கூடாது என, வலியுறுத்துகிறது. இதனால், இந்தியாவில், 'ரேபிஸ்' போன்ற நோய்கள் பெருகி, மருத்துவ செலவு அதிகரிக்கிறது. ரேபிஸ் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்து கம்பெனிகள், பீட்டா அமைப்புக்கு ஆதரவளிக்கின்றன.

ஜல்லிக்கட்டு என்பது, தமிழகத்தில் மட்டுமே நடக்கும் பண்பாடு சார்ந்த வீர விளையாட்டு. இது குறித்த செய்திகள், பழந்தமிழ் இலக்கியங்களான, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி உள்ளிட்டவற்றில் உள்ளன. வட மாநிலங்களில், பசுவை தான், காமதேனுவாக வணங்குவர்.காளைகளை, நந்தியாக வணங்கும் பழக்கம், தமிழர்களுக்கே உரிய தனிப்பட்ட பண்பாடு. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை உடைக்கும் முயற்சியில் உள்ள, வட இந்தியர்களும், பீட்டாவுடன் இணைந்துஉள்ளனர்.

பொதுவாக, வீரியமான வீரர்கள் தேர்வுக்காகவே, ஜல்லிக்கட்டு இருந்தது. வீரியமான விலங்குகளை தேர்வு செய்ய, சேவல் சண்டை, கிடா சண்டைகளை நடத்தினர். அவை, நமக்கான தனித்த அடையாளங்கள். இவற்றை உடைக்கும் முயற்சியாகவே, தற்போதைய தீர்ப்பை கருதுகிறோம்.

ஏற்கனவே, விவசாயம் அழிந்த நிலையில், பல நாட்டு இன மாடுகள், காளைகள் அழிந்து விட்டன. இந்நிலையில், ஜல்லிக்கட்டையும் தடுத்தால், நாட்டுரக காளைகள் அழியும். அதன் பின், வெளிநாட்டு காளைகளின் விந்தை, செயற்கையாக ஊசி மூலம் கருத்தரிக்க வைக்கும் முயற்சி தான் நடக்கும்.

ஏற்கனவே, வெளிநாட்டு பாலை பயன்படுத்துவதால் தான், சர்க்கரை, மூளை, கணையம் போன்ற உறுப்புகள் சார்ந்த நோய்கள் பரவி வருகின்றன. தொடர்ந்து, பதப்படுத்தப்பட்ட, செயற்கை, 'ஹார்மோன்'கள் சேர்க்கப்பட்ட பால் பொருட்களின் விற்பனை அமோகமாகும்.

அழிக்கும் செயல்

காவல் துறையில், மோப்ப நாய்கள் பயன்பாட்டையும், விலங்குகள் வதை என, பீட்டா கூறி வருகிறது. பாரம்பரியமாக வளர்க்கும் விலங்குகளை யாரும் வதைக்க மாட்டார்கள். அவ்வாறு வதைப்பதாக கருதினால், அவற்றை மீட்டு காப்பாற்ற வேண்டும். அவ்வாறு செய்யாமல், தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்கும் செயலில், பீட்டா ஈடுபடுகிறது.

எனவே, அதற்கான உரிமைக்குரலாக தான், தற்போது மாணவர்கள் இணைந்து உள்ளோம். பீட்டாவை தடை செய்யக் கோரி, முதல்வர், பிரதமர், ஜனாதிபதி அலுவலகங்களுக்கு, லட்சக்கணக்கான கடிதங்களை அனுப்பி வருகிறோம். உணர்வு ரீதியாக, வகுப்புகளை புறக்கணித்து, போராட்ட களத்திற்கு வந்துள்ளோம். இதில், அரசியலுக்கு இடமில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'போராட்ட களத்தை மாற்றுவோம்!'

போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:முகநுால், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், பகுதி வாரியாக கணக்குகளை துவக்கி, இளைஞர் களை ஒருங்கிணைக்கிறோம். எங்களுக்கு, டாக்டர்கள், வழக்கறிஞர்கள், உணவகங்களில் இருந்தும், பொதுமக்களிடமிருந்தும் ஆதரவு பெருகுகிறது.

அறவழியில் தான் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். அடுத்து, மத்திய அரசின் பார்வையை திருப்பும் வகையில், ரயில், விமான நிலையங்களையும் போராட்ட களமாக மாற்ற உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

மூலக்கதை