பிப்.11ல் முதல் கட்ட வாக்குப்பதிவு; உ.பி.யில் 73 தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிப்.11ல் முதல் கட்ட வாக்குப்பதிவு; உ.பி.யில் 73 தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது

லக்னோ - உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் 11ம் தேதி நடைபெறவுள்ள முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி, மார்ச் 8ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கு பிப்ரவரி 11ம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

வேட்பு மனு தாக்கலுக்கு வரும் 24ம் தேதி கடைசி நாளாகும். 27ம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளிலேயே பலரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால், தேர்தல் அலுவலகங்கள் விறுவிறுப்பாக காணப்பட்டது.

 
 
கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர், மீரட், காசியாபாத், புலந்த் சாகர் உள்ளிட்ட முக்கியமான 15 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு பெரும்பான்மையான வாக்காளர்களாக முஸ்லிம்கள் உள்ளனர்.

இந்த பகுதிகளில் 2014ல் லோக்சபா தேர்தலில் பாஜ அதிகமான வாக்குகளை பெற்றிருந்த போதிலும், சட்டமன்ற தேர்தலிலும் அதை தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தலித் மற்றும் முஸ்லிம் வாக்குகளை அதிகம் கொண்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் போட்டி களமாக இந்த தொகுதிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், புதிதாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள தெலங்கானாவைச் சேர்ந்த அசாதுதீன் உவைசியின் மஜ்லீஸ் கட்சியின் தாக்கமும் இந்த முதல் கட்ட வாக்குபதிவில் காணப்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எனவே, இந்த தொகுதிகளில் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

.

மூலக்கதை