நாடு முழுவதும் 5 லட்சம் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன மத்திய அரசு தகவல்

தினத்தந்தி  தினத்தந்தி
நாடு முழுவதும்
5 லட்சம் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன
மத்திய அரசு தகவல்

புதுடெல்லி,

நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான போலீஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

போலீஸ் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு குழுவின் ஆய்வறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் போலீஸ் துறை தொடர்பான சில முக்கிய புள்ளிவிவரங்கள் இடம் பெற்று உள்ளன.

அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

5 லட்சம் காலியிடங்கள்

* இந்தியா முழுவதும் 15 ஆயிரத்து 555 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரத்து 14 போலீஸ் நிலையங்கள் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன.

* நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் போலீஸ் துறையில் அனுமதிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் 22 லட்சத்து 63 ஆயிரத்து 222. இதில் 17 லட்சத்து 61 ஆயிரத்து 200 இடங்களில் ஊழியர்கள் உள்ளனர். 5 லட்சத்து 2 ஆயிரத்து 22 பணியிடங்கள் காலியாக உள்ளன.

* இந்த பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட 3 லட்சத்து 64 ஆயிரத்து 200 போலீஸ் பணியிடங்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

தமிழ்நாடு

* மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 176 பணியிடங்களில் சுமார் 36 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

* பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 554 பணியிடங்களில் சுமார் 30 ஆயிரத்து 300 பணியிடங்கள் காலியாகவும், கர்நாடகத்தில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 53 பணியிடங்களில் சுமார் 25 ஆயிரத்து 500 இடங்களும், குஜராத்தில் மொத்தம் உள்ள 99 ஆயிரத்து 423 இடங்களில் சுமார் 17 ஆயிரத்து 200 இடங்களும் காலியாக இருக்கின்றன.

* தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 830 பணியிடங்களில் சுமார் 16 ஆயிரத்து 700 பணியிடங்கள் காலியாக உள்ளன.

* ஜார்கண்ட் மாநிலத்தில் 73 ஆயிரத்து 713 பணியிடங்களில் 15 ஆயிரத்து 400 பணியிடங்களும், சத்தீஷ்காரில் 68 ஆயிரத்து 99 பணியிடங்களில் 8 ஆயிரத்து 500-க்கும் அதிகமான பணியிடங்களும் காலியாக இருக்கின்றன.

வாகனங்கள் கிடையாது

* போலீஸ் துறையில் மொத்தம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 358 வாகனங்கள் உள்ளன. 100 போலீசாருக்கு 10.13 வாகனங்கள் என்ற எண்ணிக்கையில் வாகன வசதி உள்ளது.

* நாடு முழுவதும் 188 போலீஸ் நிலையங்களுக்கு வாகனங்களே கிடையாது.

* 402 போலீஸ் நிலையங்களுக்கு தொலைபேசி இணைப்பு இல்லை.

* 134 போலீஸ் நிலையங்களுக்கு வயர்லெஸ் கருவிகள் கிடையாது.

* 65 போலீஸ் நிலையங்களுக்கு தொலைபேசி வசதியும் கிடையாது, வயர்லெஸ் வசதியும் கிடையாது.

வயர்லெஸ் கருவிகள் பறிப்பு

* மணிப்பூர் மாநிலத்தில்தான் அதிக போலீஸ் நிலையங்கள் போதிய வசதிகள் இன்றி செயல்படுகின்றன. இவை பெரும்பாலும் கிராமப்பகுதிகளில் அமைந்துள்ளன.

* சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அமைந்துள்ள போலீஸ் நிலையங்களில் இருந்து வயர்லெஸ் கருவிகள், வாகனங்கள் ஆகியவற்றை மாவோயிஸ்டுகள் அடிக்கடி பறித்துச் சென்று விடுகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மூலக்கதை