ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூபாய் நோட்டுகளில் இருந்து காந்தி படம் நீக்கப்படும் : அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம்

மும்பை: காதி காலண்டரைத் தொடர்ந்து ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் நீக்கப்படும் என்ற அரியானா அமைச்சர் பேச்சுக்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய கதர் கிராம கைத்தொழில் ஆணையத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இதன் சார்பில் காலண்டர் மற்றும் டைரிகளை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு காந்தி நூல் நூற்பது போன்று இடம் பெற்றுவந்த படம் நீக்கப்பட்டுள்ளது.

மாறாக, மோடி பைஜாமா குர்தாவுடன் ராட்டையை சுழற்றுவது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காதி ஊழியர்கள், ஜனநாயக அமைப்புகள், காந்தியவாதிகள், எதிர்கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த போக்கை நியாயப்படுத்தும் வகையில் அரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், காந்தியின் அடையாளத்துடன் காதியை இணைத்ததால்தான் அந்த தொழில் இந்தியாவில் வளர்ச்சி அடையாமல் போனது. ஏனெனில் காந்திக்கு அப்படி ஒரு பெயர்.

காலண்டரில் காந்திக்கு பதிலாக மோடியின் படம் இடம் பெற்றுள்ளது வரவேற்க வேண்டிய விஷயமாகும். காந்தி படத்துடன் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டதால்தான் பணத்தின் மதிப்பும் இழந்து விட்டது.

ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் படிப்படியாக நீக்கப்படும். காந்தியை விட மோடியின் பெயருக்கு வர்த்தக கவர்ச்சி மற்றும் அடையாளம் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு ராகுல் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்திருந்தார்.

இதுகுறித்து ராகுல் கூறுகையில், சர்வாதிகாரிகளான ஹிட்லர், முசோலினி போன்றோர் கூட வலிமையான வர்த்தக அடையாளம் தான் என்று விமர்சித்துள்ளார். இதன் மூலம் மறைமுகமாக ஹிட்லர், முசோலினி போல பிரதமர் மோடியும் சர்வாதிகா ரியாக தன்னை காட்டி கொள்ள விரும்புகிறார் என்பதையே அவர் இவ்வாறு மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளார் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அரியான அமைச்சர் பேச்சு பல்வேறு தரப்பிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

.

மூலக்கதை