தமிழக மக்கள் விருப்பத்தை புறக்கணித்தால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ‘‘தமிழக மக்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்தால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும்’’ என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு அனுமதி கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையிலான அதிமுகவினர் நேற்று சந்தித்து மனு அளித்தனர். அதன்பின் தம்பித்துரை அளித்த பேட்டியில் கூறியதாவது:காவேரி, முல்லைப் பெரியார், கச்சத்தீவு, தமிழக மீனவர்கள், இலங்கை தமிழர்கள் பிரச்னை மற்றும் தமிழ் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு உட்பட பல பிரச்னைகளை தமிழக அரசு எழுப்பிக் கொண்டிருக்கிறது. மாநில பிரச்னை தொடர்பாக, பிரதமரை சந்திக்க அதிமுக எம்.பி.க்கள் கடந்த ஒரு வருடமாக நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பிரதமரை சந்திக்க கடந்த 3 நாட்களாக நாங்கள்  காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. அவர் எங்களை அழைக்கலாம் என நம்புகிறோம். எம்.பி.க்கள், துணை சபாநாயகர் ஆகியோரே பிரதமரை சந்திக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவது தொடர்பாக, மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு காத்திருந்தது. இதற்கு முன்னாள் ஐ.மு.கூட்டணி அரசும் எதுவும் செய்யவில்லை. பா.ஜ அரசும் உதவவில்லை. அதனால் இப்போது இந்த அவசர சட்டம். நமது விருப்பங்களை நிறைவேற்ற தவறினால் என்ன ஆகும்? தமிழ் பண்பாட்டை காக்க லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடுவோம் என்பதை தமிழகம் காட்டிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு இதை புரிந்து கொண்டு பிரச்னைகளை தீர்க்க வேண்டும். ஒரு நாடு, ஒரே வரி ஜிஎஸ்டிக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் ஒரே மொழி, ஒரே பண்பாடு என்பது கூட்டாட்சிக்கு நல்லதல்ல. தமிழகத்தின் எண்ணங்களும், விருப்பங்களும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். நிரந்தர தீர்வு கோரி அன்புமணி மனுஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பா.ம.க எம்.பி அன்புமணி நேற்று சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி மனு அளித்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகத்தில் அமைதி வழியில் போராட்டம் நடைபெறுவதை கேட்டு ஜனாதிபதி மகிழ்ச்சி அடைந்தார். தமிழக நலனுக்காகவும், தமிழக மக்களின் பண்பாட்டுக்காவும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்த தீர்வு ஏற்படுத்தும்படி நான் வேண்டுகோள் விடுத்தேன்’’ என்றார்.

மூலக்கதை