கோவா சட்டப்பேரவை தேர்தல் முக்கிய ‘தலை’களுக்கு சீட் மறுப்பு பாஜ, காங்கிரசில் அதிருப்தி

தினகரன்  தினகரன்

பனாஜி: கோவா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் பா.ஜ, காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 4ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் பா.ஜ மற்றும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகர்களாக இருந்த சிலருக்கு இந்த தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை. இது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டப்பேரவையில் ஆளும் பாஜ.வுக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 3 பேருக்கு இந்த தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை. கனகோனா தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்தவர் ரமேஷ் தவாத்கர். இவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாதது அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இவர் அதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளார். இதேபோல் கோவா சபாநாயகராக இருந்த ஆனந்த் சேத்துக்கு பாஜ வாய்ப்பளிக்கவில்லை. இதனால் அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாயேம் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாயின. இதை மறுத்துள்ள ஆனந்த் சேத், ‘‘நான் எந்த கட்சி சார்பாகவும் போட்டியிடமாட்டேன், எந்த வேட்பாளருக்காவும் பிரசாரம் செய்ய மாட்டேன்’’ என கூறியுள்ளார்.கம்நர்ஜூவா தொகுதியில் ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் மகன் சித்தேஷ் நாயக்குக்கு சீட் வழங்குவதாக இருந்தது. ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்த தொகுதிகள் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் பா.ஜ.வில் சேர்ந்த விஜய் பாய் காட், பிரவீன் ஜியாந்தே, பாண்டுரங் மடகாய்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு விட்டது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும் மூத்த தலைவர்கள் உட்பட பலருக்கு சீட் தரவில்லை. முன்னாள் அமைச்சர் சங்கீதா பரப், ஜித்தேந்திர தேஷ் பிரபு, பிரதாப் கவாஸ், மற்றும் ஜோக்கிம் அலேமா, சுனில், உர்பன் முலா போன்ற பிரமுகர்களுக்கும் இந்த தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்கப்படவில்லை.

மூலக்கதை