மதுவுக்கு எதிராக பீகாரில் உலகின் மிக நீண்ட மனித சங்கிலி போராட்டம்

தினகரன்  தினகரன்

பாட்னா: பீகாரில் மதுவுக்கு எதிரான உலகின் நீண்ட மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பீகாரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மதுவிற்பனை அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுவுக்கு எதிரான உலகின் மிக நீளமான மனித சங்கிலி போராட்டத்திற்கு முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நேற்று நண்பகலில் 45 நிமிடம் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் தொடக்கமாக முதல்வர் நிதிஷ்குமார் வண்ணமயமான பலூன்களை வானில் பறக்கவிட்டார். தொடர்ந்து நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்யாதவ் ஆகியோர் ஒரு பக்கமும் மற்றொரு பக்கத்தில் சபாநாயகர் விஜய்குமார் சவுத்ரி துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் சிவான் பகுதியில் பொதுமக்களுடன் இணைந்து கைகோர்த்து நின்றனர். சுமார் 3 கோடி பேர் பங்கேற்ற இந்த மனிதசங்கிலி சுமார் 11,292 கி.மீ தொலைவுக்கு நீண்டு காணப்பட்டது.

மூலக்கதை