ஜல்லிக்கட்டு தடைக்கு நான் காரணமல்ல: ராதா ராஜன்

தினமலர்  தினமலர்
ஜல்லிக்கட்டு தடைக்கு நான் காரணமல்ல: ராதா ராஜன்

சென்னை: ''உச்ச நீதிமன்றத்தில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கும், எனக்கும் சம்பந்தமில்லை,'' என, பிராணிகள் நல ஆர்வலர் ராதா ராஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:
நான், 24 ஆண்டுகளாக, பிராணிகள் நல அக்கறையில் ஈடுபட்டு வருகிறேன். 2008ல் இருந்து, 2014 வரை, ஜல்லிக்கட்டு போட்டியால், 43 இளைஞர்கள், நான்கு காளைகள் உயிர் இழந்துள்ளன.
5,000 பேர் காயம் அடைந்த நிலையில், 3,000 பேர் படுகாயமடைந்து உள்ளனர். மத்திய அரசு, 2011ல், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்தது. அதனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன்; அந்த வழக்கு ஏற்று கொள்ளப்படவில்லை.

இதையடுத்து, பிராணிகள் நல வாரியம், ஜல்லிக்கட்டு மீதான தடை வழக்கை ஏற்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 'பீட்டா' அமைப்பும், தனியாக மனு தாக்கல் செய்தது.
இதில், 2014 மே, 7ல், வெளியான தீர்ப்பில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டது. எனவே, ஜல்லிக்கட்டு தடைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆனால், சிலர் தேவையின்றி, 'என்னை ஜல்லிக்கட்டுக்கு எதிரான நபர்' என்று, சமூக வலைதளங்களில் அவதுாறாக பதிவிடுகின்றனர். அதைபார்த்து, பலரும் எனக்கு மிரட்டல் விடுப்பதுடன், வீட்டையும் முற்றுகையிட்டு வருகின்றனர். இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், 'ராதா ராஜன் புகாரை அடுத்து, சென்னை, பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனியில் உள்ள அவரின் வீட்டுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது' என்றனர்.

கடும் எதிர்ப்பு கிளம்பும் வகையில் இவர், ரேடியோவுக்கு அளித்த பேட்டி:

கூட்டம் கூடுவதோ, தெருவுக்கு வந்து போராடுவதோ, மக்களுடைய கருத்துக்களை பிரதிபலிப்பதாகி விடாது. தமிழக பிரச்னைக்காக போராட வாருங்கள் என அழைப்பு விடுத்தால், 25 ஆயிரம் பேர் வருவர். அதுவே, 'செக்ஸ்' பற்றிய போராட்டம் என்றால், 50 ஆயிரம் பேர் வருவர். கூட்டத்தை வைத்து, எடை போடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதேபோல், ஜல்லிக்கட்டுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள, அகில இந்திய பிராணி கள் நல வாரியத்தின் தலைவரும், தொழில் அதிபருமான சின்னி கிருஷ்ணாவும், சமூக வலைதளங்களில் கடும் சாடலுக்கு ஆளாகியிருக்கிறார். அவர், 'புளு கிராஸ்' அமைப்பின் தலைவராக இருந்தவர்.

மூலக்கதை