ஜல்லிக்கட்டு, சேவல் சண்டைக்கு தடை விதிப்பது ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து: பவன்கல்யாண் கருத்து

தினகரன்  தினகரன்

ஐதராபாத்: ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் சண்டைக்கு தடை விதிப்பது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக முடியும் என தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து வரலாறு காணாத வகையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்திற்கு வெளியே நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு தடையை உடனடியாக நீக்க வேண்டுமென தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், ‘‘தென்னிந்தியாவில் ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் சண்டைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். நான் எனது பண்ணையில் நாட்டு பசுக்கள், சேவல்கள் ஆகியவற்றை வளர்த்து வருகிறேன். ஜல்லிக்கட்டையும் சேவல் சண்டையையும் தடை செய்வது திராவிட கலாச்சாரம் மற்றும் ஒருமைப்பாடு மீதான தாக்குதல் ஆகும். ஜல்லிக்கட்டு மற்றும் சேவல் சண்டைக்கு  விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு உடனே விலக்க வேண்டும். நமது சமூகத்தின் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தவறினால் அது நமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாக முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை