ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்: தில்லியில் முதல்வர் தீவிர ஆலோசனை

PARIS TAMIL  PARIS TAMIL
ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்: தில்லியில் முதல்வர் தீவிர ஆலோசனை

ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக தில்லியில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முகாமிட்டு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாகத் துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சட்டப்பூர்வ அனுமதி வழங்க வலியுறுத்தி சென்னை, மதுரை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விளக்குவதற்காக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை நள்ளிரவு தில்லிக்கு வந்தார். மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மக்களவை, மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர்கள் டாக்டர் பி.வேணுகோபால், நவநீதகிருஷ்ணன் தலைமையில் இரு அவை உறுப்பினர்கள் வந்தனர்.
30 நிமிட சந்திப்பு: இதையடுத்து, பிரதமர் மோடியை லோக் கல்யாண் மார்கில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை காலை பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது.
பின்னர் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் திரும்பிய முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் பாரம்பரிய உரிமை மற்றும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியறுத்தினேன். இந்த விவகாரத்தில் அவசரச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பிரதமரிடம் வற்புறுத்தினேன்.
பிரதமர் பதில்: "தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பளிக்கிறேன். அங்கு நிலவும் பிரச்னைகளை அறிந்துள்ளேன். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி, மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், மாநில அரசு இது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்' என்று பிரதமர் மோடி பதில் அளித்தார்.
ஜல்லிக்கட்டு நடத்தத் தேவையான நடவடிக்கையை மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு எடுக்கும். இது பற்றிய மாநில அரசின் நடவடிக்கையை கூடிய விரைவில் நீங்கள் அறிவீர்கள். பொறுமையாக இருங்கள். விரைவில் நல்லது நடக்கும் என்றார் பன்னீர்செல்வம்.
மத்திய அமைச்சர் சந்திப்பு: இந்நிலையில், பிற்பகலில் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த மத்திய சாலை, நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் ஜல்லிக்கட்டு பேரவையின் நிர்வாகிகளுடன் சேர்ந்து மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அனில் மாதவ் தவேவை வெள்ளிக்கிழமை சந்திக்கவுள்ளேன். ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாக முதல்வர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். பிரதமரின் பதில் மூலம் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை "விஷயம் தெரிந்தவர்கள்' புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்' என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

மூலக்கதை