தமிழர்களின் அடையாளத்தை மீட்க முடியாத அரசு வழங்கிய எந்த அடையாள அட்டையும் வேண்டாம்

தினமலர்  தினமலர்
தமிழர்களின் அடையாளத்தை மீட்க முடியாத அரசு வழங்கிய எந்த அடையாள அட்டையும் வேண்டாம்

சென்னை: தமிழர்களின் அடையாளமான ஜல்லிகட்டை மீட்க முடியாத மத்திய, மாநில அரசுகள் வழங்கிய எந்த அடையாள அட்டையும் எங்களுக்கு தேவையில்லை என ஜல்லிக்கட்டு பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் கூறிவருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்தகோரி நேற்று(19ம் தேதி) முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதற்கு பிரதமர் ஜல்லிகட்டு வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் எதுவும் செய்ய முடியாது என கை விரித்துவிட்டார். எனினும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரும் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து முதல்வர் பன்னீர் செல்வமும் தமிழக அரசின் நடவடிக்கையை விரைவில் காண்பீர்கள் என கூறினார்.

ஜல்லிகட்டு விவகாரம் பிரதமர் வரை சென்றும் செல்லுபடியாகததால் இளைஞர்கள் அடுத்தக்கட்ட பேராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இளைஞர்கள் தங்கள் அடையாள அட்டைகளாக ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து அடையாள அட்டைகளையும் ஒப்படைக்க போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து இளைஞர்கள் கூறுகையில்:‛‛ தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டை அழிக்க பல்வேறு அமைப்புகள் துடித்து வருகின்றன. தமிழகம் முழுவதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியும் அரசும் சட்டமும் எங்களுக்கு சாதகமாக மாறவில்லை, எங்கள் பேராட்டத்தை வைத்து பலர் அரசியல் செய்ய துடிக்கின்றனர். அதற்கு நாங்கள் ஒரு போதும் விடமாட்டோம். தமிழர்களின் அடையாளமான ஜல்லிகட்டை மீட்டு தரமுடியாத இந்த அரசு வழங்கிய எந்த அடையாள அட்டையும் எங்களுக்க தேவையில்லை நாங்கள் எங்கள் அடையாள அட்டைகளை திருப்ப ஒப்படைப்போம்'' என கூறினர். அரசின் பல்வேறு நடவடிக்கைகள் பலனிக்காமல் போய் வருவதால் இளைஞர்கள் இந்த முடிவை எடுக்க போவதாக அறிவித்துள்ளனர்.

அடையாள அட்டைகளை இளைஞர்கள் ஒப்படைக்க துவங்கும் பட்சத்தில் இந்த போராட்டம் மேலும் தீவிரமடையும் எனவும் ஜல்லிகட்டை நடத்த அரசு எடுத்து வரும் செயல்பாடு மேலும் தீவிரமடையும் எனவும் இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை