மல்லையாவுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப கோர்ட் உத்தரவு

தினமலர்  தினமலர்
மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவு

புதுடில்லி: கோர்ட் உத்தரவுகளை மீறி, 273 கோடி ரூபாயை, தன் குழந்தைகளின் பெயருக்கு மாற்றியதாக, வங்கிகள் கூறிய புகார் குறித்து பதிலளிக்கும்படி, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையாவுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டதை தொடர்ந்து, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றான், பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையா. இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், வங்கிகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தன் சொத்துக்களை விஜய் மல்லையா விற்கக் கூடாது, யாருக்கும் மாற்றக் கூடாது என, கோர்ட்டுகள் உத்தரவிட்டுள்ளன. இந்நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த, 'டியாஜியே' என்ற நிறுவனத்தில், தன் பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த, 273 கோடி ரூபாயை, விஜய் மல்லையா, தன் குழந்தைகளின் பெயருக்கு மாற்றியுள்ளான்; அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை விசாரணைக்கு ஏற்ற, நீதிபதிகள், குரியன் ஜோசப், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, இது குறித்து பதிலளிக்கும்படி, விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட அமர்வு, வழக்கு விசாரணையை, பிப்., 2க்கு ஒத்தி வைத்தது.

மூலக்கதை