சூரிய மின்சாரத்தீவு

தினகரன்  தினகரன்
சூரிய மின்சாரத்தீவு

மின்சார கார்கள் தயாரிப்பில் முத்திரை பதித்த தனியார் நிறுவனம், சூரிய மின்சாரத்தை சேமிக்கும் மின்கலன்களை தயாரிக்கும் சோலார் சிட்டி நிறுவனத்தை சமீபத்தில் வாங்கியது. கையோடு, ஒரு புதிய சாதனையை அறிவித்திருக்கிறது. ஒரு சிறு தீவில் வசிப்பவர்களின் முழு மின்சார தேவையையும் சூரிய மின் தகடுகள் மூலம் வழங்கியிருக்கிறது அந்த நிறுவனம். அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவு கூட்டங்களில் ஒன்றான, ‘தாவ்’ தீவு, 17 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இத்தீவில் வசிக்கும், 785 பேருக்கு தேவையான மின்சாரத்தை, தினமும், 1,135 லிட்டர் டீசல் செலவு செய்து ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்து வந்தனர். இருந்தாலும், மின்சாரம் வீட்டுக்கு இவ்வளவு என்று அளவாகவே கிடைத்தது. ஜெனரேட்டர் பழுதானால் மின்சாரம் கிடைக்காது. தாவ் தீவுக்கு சூரிய மின்சாரம் வழங்கும், 20 ஆண்டு ஒப்பந்தம் இந்த நிறுவனத்திற்கு கிடைத்தது. சில மாதங்களிலேயே, அத் தீவில், 5,328 சூரிய மின் பலகைகளை நிறுவியது. அவை உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சேமித்து வைக்க, ‘பவர் பேக்’ எனப்படும், 60 லிதியம் அயான் மின்கலன்களையும் நிறுவியது. இவை ஒவ்வொன்றும், 7 மணி நேர சூரிய ஒளி கிடைத்தால், முழுவதும் மின்னேற்றம் பெற்றுவிடும். இந்த மின்கலன்கள் ஒட்டுமொத்தமாக, 6 மெகாவாட் மின்சாரத்தை தேக்கி வைக்கக்கூடியவை. இது, மூன்று நாட்களுக்கு தாவ் தீவுவாசிகளின் தேவைக்குப் போதுமானது. இதனால் ஆண்டுதோறும் 4,14,502 லிட்டர் டீசல் செலவு மிச்சம்.

மூலக்கதை