ஜெ. உடல்நிலை சீரியஸ் அதிர்ச்சியில் 5 பேர் சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெ. உடல்நிலை சீரியஸ் அதிர்ச்சியில் 5 பேர் சாவு


திட்டக்குடி, -தமிழக  முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்த அதிமுக  பிரமுகர்கள் 4 பேர் அதிர்ச்சியில் இறந்தனர். தர்மபுரி அருகே மேலும் ஒரு பெண் இறந்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை  அப்போலோ மருத்துவமனையில் கடந்த 74 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்  நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு  டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து தமிழகம்  முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், ஜெ.   உடல்நிலை பற்றி தகவல் அறிந்த 4 அதிமுக பிரமுகர்கள் அதிர்ச்சியில்  இறந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த  நெய்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (63), அதிமுக கிளை கழக  பொருளாளராக உள்ளார்.

இவர் நேற்று இரவு டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.   அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்றுவரும் செய்தியை பார்த்தவுடன் மயங்கி விழுந்து இறந்தார். இதே ஊரை  சேர்ந்த அதிமுக கிளை கழக துணை செயலாளர் சாமுண்டி (63) நேற்றிரவு ஜெ.   உடல்நிலை பற்றிய செய்தியை டிவியில் பார்த்துவிட்டு படுத்து தூங்கினார்.   இன்று காலை அவர் படுக்கையில் இருந்து எழாததால் அவரது உறவினர்கள் சாமுண்டியை  எழுப்பினர். அப்போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் அந்த  கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்  மாவட்டம் பண்ருட்டி அருகே சன்னியாசிபேட்டையை சேர்ந்த அதிமுக பிரமுகரும்,  ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளருமான வீரப்பன் மகன் நீலகண்டன் (36) என்பவர்  நேற்றிரவு ஜெயலலிதா உடல்நிலை குறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அதிர்ச்சி அடைந்த அவருக்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் கடலூர் அரசு  பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக  இறந்தார்.



காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர்   அடுத்த முதலியார்குப்பம்  கிராமத்தை  சேர்ந்தவர் பெருமாள் (58). இடைக்கழிநாடு பேரூராட்சி அதிமுக  அமைப்பு  நிர்வாகி.

இவர், மனைவி சாரதா  மற்றும்  குடும்பத்தினருடன் நேற்றிரவு டிவி  பார்த்து  கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என்ற  செய்தியைப்  பார்த்து பெருமாள் அதிர்ச்சியடைந்தார்.

இதில் அவருக்கு  மாரடைப்பு  ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.
பெண் பலி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாரண்டஅள்ளி போயர்  தெருவை சேர்ந்தவர் பங்காரு. கூலி தொழிலாளி.

இவருடைய மனைவி சுசீலா (55).   சென்னையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்  நலக் குறைவு ஏற்பட்ட தகவல் நேற்று இரவு அனைத்து பகுதியிலும் பரவியது.   இத்தகவலை கேள்விப்பட்ட பங்காரு, இரவு 10. 30 மணியளவில் தன்னுடைய மனைவியிடம்  தெரிவித்தார். அப்போது முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை கேட்ட  சுசீலாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்கு கொண்டு சென்ற நிலையில் சுசீலா உயிரிழந்தார்.

.

மூலக்கதை