2019-ம் ஆண்டில் ஆதித்யா-எல் 1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்

கதிரவன்  கதிரவன்
2019ம் ஆண்டில் ஆதித்யாஎல் 1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்

விண்வெளியை பற்றிய ஆய்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்தை பற்றியும், சந்திரனை பற்றியும் ஆராய விண்கலங்களை அனுப்பியுள்ள இந்தியா அடுத்ததாக சூரியனை பற்றிய ஆராய்ச்சியிலும் தீவிர கவனம் செலுத்துகிறது.

சூரியனை பற்றி ஆராய்வதற்காக முதன் முதலாக வருகிற 2019-2020-ம் நிதி ஆண்டில் ஆதித்யா-எல் 1 என்ற செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்ணுக்கு செலுத்த திட்டமிட்டு உள்ளது. முதலில் ஆதித்யா-1 என்ற பெயரிலான செயற்கை கோளை அனுப்ப திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த திட்டத்தில் சில மாற்றங்களை செய்து ஆதித்யா-எல் 1 செயற்கை கோளை அனுப்ப தற்போது தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கை கோளில் ஆய்வுக்கருவிகளும், தகவல் தொடர்பு சாதனங்களும் இடம்பெற்று இருக்கும்.

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்துபி.எஸ்.எல்.வி-எக்ஸ்.எல் ராக்கெட் மூலம் ஆதித்யா-எல் 1 செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும்.

400 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் ஒளிவட்ட பாதையில் (எல்-1) சுற்றி வரும். அவ்வளவு தொலைவில் சுற்றி வருவதால் அது எப்போதும் சூரியனை பார்த்தபடி இருக்கும். கிரகணங்கள் சமயத்தில் கூட அது சூரியனின் பார்வையில் இருந்து மறையாது. ஆதித்யா-எல் 1 செயற்கை கோளில் உள்ள கருவிகள் அனுப்பும் தகவல்கள் மூலம் சூரியனை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட தகவல்களை இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

2016-01-27

மூலக்கதை