உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !!

வரும் 2016ம் ஆண்டு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாட்டை நடத்த டெல்லி தமிழ் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் மிக பழமையான தமிழ் சங்கங்களுள் ஒன்றாக கருதப்படும் டெல்லி தமிழ் சங்கம், கடந்த 1946ம் ஆண்டு துவங்கப்பட்டது. துவங்கியது முதல், தமிழ் மொழியை தலைநகரில் வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை இத்தமிழ்ச் சங்கம் மேற்கொண்டு வருகிறது.

டெல்லி தமிழ் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருக்கும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்களை அழைக்க தமிழ் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுவரை, தமிழ் மொழியை மையமாகக் கொண்டு எந்த ஒரு மாநாடும் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடைபெறவில்லை. கடந்த 2011ம் ஆண்டு அனைத்து இந்திய தமிழ் சங்கங்களின் மாநாடு நடைபெற்றது. ஆனால், தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் பங்குபெறும் ஒரு முக்கிய மாநாடு டெல்லியில் நடைபெறுவது இதுதான் முதல் முறை.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 மற்றும் 6-ம் தேதிகளில் இந்த மாநாட்டை நடத்தவும், இந்த மாநாட்டை துவக்கி வைக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், நிறைவு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அழைக்க டெல்லி தமிழ் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ் மக்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் 500 தமிழ் அறிஞர்கள், மொழி ஆர்வலர்கள் மற்றும் முக்கிய நபர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவிலிருந்தும் தமிழ் அறிஞர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் 50 பேரை அழைக்க டெல்லி தமிழ் சங்கம் முடிவு செய்துள்ளது.

டெல்லியில் நடைபெறும் இந்த மாநாடு உலகளவில் முக்கியத்துவம் பெரும் என டெல்லி வாழ் தமிழர்கள் கருதுகின்றனர்.

மூலக்கதை